ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் : விசாரணையின் பின் கட்சியிலிருந்து நீக்குவது குறித்து தீர்மானம் ­- ஐக்கிய மக்கள் சக்தி

258 0

கட்சியின் கொள்கைக்கு மாறாக கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேசரிக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இரு அமைச்சுப்பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்காரவும் நேற்று (20)வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அவ்விருவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்கில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவைத் தொடர்புகொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

கட்சியின் கொள்கைக்கு மாறாக அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் காரணமாக ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரினதும் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கை என்னவென்பது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

விசாரணையின் பின்னர் அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்களா? என்று வினவியபோது, அது விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கவே விரும்புகின்றோம் என்றும் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பதிலளித்தார்.

அதேவேளை தமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம்வகிப்பவர்களை நீக்குவது இலகுவான காரியமல்ல என்றும், இவ்விடயத்தில் உரியவாறான நடைமுறைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது