நாட்டில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது – ரணில்

256 0

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம்.

அதற்கு அவர்கள் சாதகமான முறையில் பதிலளித்திருக்கின்றனர். குறிப்பாக எமக்கு இந்தியாவே துரிதமாக உதவிகளை வழங்கியது.

அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நிதியுதவி நாம் தொடர்ந்து இயங்கும் நிலையை உறுதிசெய்தது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

;பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு நிகழ்நிலையில் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

அந்நேர்காணலில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் வருமாறு:

கேள்வி – நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலானவை ஜனாதிபதிக்கு எதிராகவே முன்னெடுக்கப்படுகின்றன. அதேவேளை மறுபுறம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டங்கள் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் – ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ளமுடியும். இளைஞர்கள் தமது எதிர்காலம் பறிபோவதாகவும், நடுத்தரவர்க்கத்தைச்சேர்ந்த முதியவர்கள் தமது வாழ்க்கைமுறை வீழ்ச்சியடைவதாகவும் கூறி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இவற்றின் மூலம் மக்களின் கோபமும் நம்பிக்கையற்ற தன்மையும் வெளிப்படுகின்றன. நாங்கள் ஸ்திரமான நிலையில் இல்லை.

அதேவேளை நீங்கள் காண்பித்த ஆர்ப்பாட்டம் வன்முறைப்போக்குடைய இளைஞர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமாகும். இந்தக்குழுவினர் வருடாந்தம் 5 அல்லது 6 ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். தம்மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும்.

கேள்வி – உக்ரைன் யுத்தத்தின் விளைவுகளை இலங்கை அனுபவிக்கின்றதா? குறுகிய காலத்திற்குள் நிலைமை மேலும் மோசமடையுமா?

பதில் – எரிபொருள் விலையேற்றத்தின் தாக்கத்தை நாங்கள் உணர்கின்றோம். எதிர்வருங்காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று கருதுகின்றோம். விவசாய நடவடிக்கைகளுக்கு அவசியமான போதியளவு உரம் இல்லை என்பது எமது முக்கிய கரிசனைக்குரிய விடயமாக இருக்கின்றது. எதிர்வரும் பருவகாலத்தில் முழுமையான விளைச்சளைப் பெற்றுக்கொள்ளமுடியாது. அதனால் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் நாட்டில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது.

கேள்வி – உங்களுக்கு உதவ முன்வரக்கூடிய சர்வதேச நாடுகளுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பதில் – நாங்கள் வங்குரோத்து நிலையிலேயே இருக்கின்றோம். கடன்களை மீளச்செலுத்துவதற்கு எம்மிடம் பணம் இல்லை. இதுகுறித்து வெட்கமடைந்தாலும், இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதுகுறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். அவர்கள் சாதகமான முறையில் பதிலளித்திருக்கின்றனர். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்றோம்

எமக்கு இந்தியாவே துரிதமாக உதவிகளை வழங்கியது. அவர்களிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொண்டோம். அது நாம் தொடர்ந்து செயற்படும் நிலையை உறுதிசெய்தது.

கேள்வி – தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் வருகைதருவது பாதுகாப்பானது என்று கூறுவீர்களா?

பதில் – சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதருவதை நாம் விரும்பவில்லை என்று கூறமுடியாது. அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணயப்பற்றாக்குறை, நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் இலங்கைக்கு விஜயம்செய்ய விரும்பமாட்டார்கள் என்று கருதுகின்றோம். ஆனால் இலங்கைக்கு வருகைதருமாறும், அதன்போது நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளமுடியும் என்றும் கூறுகின்றோம்.