திருமலை கடற்படை தளத்தில் 111 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – வைத்தியர் வீ.பிரேமானந்த்

154 0

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் தாக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக இந்த வருடம் திருமலை மாவட்டத்தில் 770 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

இதில் திருகோணமலை கடற் படை தளத்தில் 111 நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள சுகாதார பணிமனையில் இன்று (21) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் டெங்கு வீரியம் அதிகரிப்பு உயர் சிவப்பு வலயங்களாக திருகோணமலை ,கிண்ணியா ,மூதூர் ,உப்புவெளி ,குச்சவெளி போன்ற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இணங்காணப்பட்டுள்ளது.

இதில் கிண்ணியா சுகாதார பிரிவில் ஆண் (வயது38) ; ஒருவர் டெங்கு நோய் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்து மரணித்த சம்பவமும் இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை பகுதியில் 203 நோயாளர்களும் , மூதூரில் 203, கிண்ணியா 77,உப்புவெளி 76 என டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடம்  (2021) ; 312 என்ற வாறு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையை விடவும் இம் முறை அது 770 ஆக அதிகரித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் டெங்கு வாரமாக மே 18 தொடக்கம் 24 வரை பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சுகாதார தரப்புடன் முப்படையினர் இணைந்து டெங்கு ஒழிப்பு பணி இடம் பெற்று வருகிறது.

இவ்வாறான கொடிய நோயிலிருந்து பாதுகாக்க பொது மக்கள் அவதானமாக செயற்படவும், தங்களது வீடுகள் காணிகளை சுத்தமாக வைத்திருக்கவும் , பாவிக்காத மலசல கூடங்களை கவனமாக நீர்தேங்காத வண்ணம் சுத்தப்படுத்துவதுடன் வெற்றுக் காணிகளையும் உரிய நேரத்தினுல் சுத்தமாக பேணவும் , அது போன்று பாடசாலைகள் அரச திணைக்களங்களில் தினசரி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் , சுத்தத்தை பேண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்  பொது மக்களை கேட்டுக் கொள்வதுடன், காய்ச்சல் ஏற்படுமிடத்து உடனடியாக வைத்தியரை நாடவும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளவும்.

சில பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு பணியின் போது லாவா குடம்பிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் அவதானமாக மக்கள் செயற்படவும் மீண்டும் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாது உடன் சட்ட நடவடிக்கைகளை இவ்வாறானவர்களுக்கு எதிராக மேற்கொள்வோம் என்றார்.