வைகாசி பதினெட்டாம் நாள்!-அகரப்பாவலன்.

348 0

வையகம் அதிர்ந்திடும் தமிழீழ அழிப்பே
வைகாசி பதினெட்டாம் நாள் !
பொய்மையின் உருவாய் கொடுமைகள் புரிந்த
தர்க்கர்கள் மகிழ்ந்த நாள் !
மெய்யது அழிந்து பூமியில் விளைந்த
இனவெறி எழுந்த நாள் !
கையறு நிலையில் தமிழரின் வாழ்வே
மண்ணிலே எரிந்த நாள் !

குண்டுகள் பொழிந்தே குடிமனை சிதைத்தே
சிங்களம் மகிழ்ந்த நாள் !
பன்னெடுங் காலமாய் வேரான இனத்தை
எரித்தே சிரித்த நாள் !
முதியவர் குழந்தைகள் சிதறியே துகள்களாய்
வானிலே கலந்த நாள் !
குருதியின் அணுக்களை மண்ணிலே விதைத்துமே
தமிழினம் ஆழ்ந்த நாள் !

உலகமே கூடியே தமிழீழ மக்களை
கொன்றுமே குவித்த நாள் !
நிலத்திலே பரவிய தமிழரின் பிணங்களில்
சிங்களம் மிதித்த நாள் !
தாயவள் மரித்ததை அறியாத குழந்தை
தாய்மடி தேடிய நாள் !
பாய்கின்ற குருதியின் சீற்றத்தில் மூழ்கியே
தமிழினம் தவித்த நாள் !

முள்ளி வாய்க்காலின் இனவெறிப் பதிவை
புவிதனில் பாதிக்கும் நாள் !
அள்ளிக் குவித்த தமிழரின் பிணங்களை
புதைகுழி ஏற்ற நாள் !
துள்ளியே பாய்ந்த தமிழரின் சேனைமேல்
ரசாயனம் ஏவிய நாள் !
துல்லியமாகவே திட்டங்கள் தீட்டியே
தமிழினம் அழித்த நாள் !

வைத்தியமின்றியே மருந்துகலின்றியே
தமிழர்கள் துடித்த நாள் !
பைத்தியமாகியே மனநிலை குன்றியே
குழந்தைகள் வெந்த நாள் !
பட்டினிச் சாவிலும் நோயதன் சாவிலும்
தமிழீழம் அழிந்த நாள் !
பட்டியின் மாடுகள் பாலதைச் சுவைத்தவர்
பசியினால் புதைந்த நாள்!

இனவெறி நாளான வைகாசி பதினெட்டை
மனங்களில் பதிவு செய்வோம் !
இனமானம் காக்க தமிழீழம் மீட்க
உறுதியின் வழி செல்வோம் !
தடையேது வரினும் விடைகாண எழுந்தே
ஒற்றுமைப் பலம் சேர்ப்போம்
கடைக் கோடித் தமிழனின் உள்ளத்தின் உள்ளே
தமிழீழ வேர் பதிப்போம் .
-அகரப்பாவலன்-