பொய்யறிக்கை தயாரிக்க மாகாணசபைக்கு பணம் வழங்கல்!

280 0

சுன்னாகத்தில் இயங்கிவந்த மின்னுற்பத்தி நிலையமான நொதேர்ண் பவர் தொடர்பினில் வடக்கு மாகாணசபையினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு பொய்யறிக்கை தயாரிப்பதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அதிகாரிகள் மட்டத்தில் இந்த விசாரணைகளை முடக்கும் அதிகாரம் ஒன்று பரந்திருப்பதாகவும் மல்லாகம் நீதவான் யூட்சன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நொதேர்ண் பவர் மின்னுற்பத்தி நிலையம் தொடர்பாக வடக்குமாகாண சபையின் அறிக்கை மாற்றியமைக்கப்பட்டமைக்கு இலஞ்சம் வாங்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே மல்லாகம் நீதவான் அ.யூட்சன் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவது தொடர்பாக சூழல், மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தினால் தொடரப்பட்ட வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மின்னுற்பத்தி நிலையம் காரணமாக மக்களின் கிணறுகளில் எண்ணெய் மற்றும் கிறீஸ் கலந்துள்ளதால் சூழல் மாசடைந்துள்ளதுடன், சுற்றுச்சூழலும் பாதிப்படைவதாக குறித்த ஆய்வு நிலையத்தினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் மே மாதம் 26ஆம் நாள் வரை உயர் நீதிமன்றம் நொதேர்ண் பவர் நிறுவனத்தின் மின்னுற்பத்திக்கு தடைவிதித்திருந்தது.

இதன்போது வடக்கு மாகாணசபை சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி இ.கனகேஸ்வரன் இந்த மனு தொடர்பாக தமக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன எனத் தெரிவித்ததையடுத்து, அவற்றை ஒரு மாதகாலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.