வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் தாக்கப்பட்ட வழக்கு: வருகிற 14-ந்தேதி மீண்டும் விசாரணை

378 0

வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் தாக்கப்பட்ட வழக்கை விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, பின்னர் வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உயர் பாதுகாப்பு அறைகளில் உள்ளனர். அதேபோன்று பல்வேறு வழக்குகளில் தண்டனைபெற்ற கைதிகளும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் கொலைவழக்கில் தண்டனைபெற்ற மதுரையை சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரும் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ள அறையின் அருகில் உள்ள அறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி பேரறிவாளனை, மற்றொரு கைதியான ராஜேஷ்கண்ணா திடீரென தாக்கினார்.

இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வேலூர் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரறிவாளன் தாக்கப்பட்டதை தொடர்ந்து சிறைத்துறை டி.ஐ.ஜி. வேலூர் மத்தியசிறையில் பேரறிவாளன் மற்றும் ராஜேஷ்கண்ணா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து ராஜேஷ்கண்ணா வேலூர் மத்தியசிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

பேரறிவாளன் சிறையில் சக கைதியால் தாக்கப்பட்ட வழக்கில் அவர் நேற்று வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-1) பிற்பகல் 3.10 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக பேரறிவாளன் பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அதேபோன்று கடலூர் மத்தியசிறைக்கு மாற்றப்பட்ட ராஜேஷ்கண்ணாவும் நேற்று கடலூரில் இருந்து அழைத்துவரப்பட்டு வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர்களிடம் மாஜிஸ்திரேட்டு அலிஷியா 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பின்னர் வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார்.