ஹபீஸ் சயீத் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்கிறது பாகிஸ்தான்

250 0

பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் மீது விரைவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து நடத்திய அதிபயங்கர தாக்குதல்களை, மூளையாக இருந்து செயல்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை நிறுவியவர். தற்போது இவர் ஜமாத் உத் தவா என்ற பெயரில் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார்.

இவர் பாகிஸ்தான் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிராக இவர் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் ஹபீஸ் சயீத் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள் 4 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜமாத் உத் தவா இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹபீஸ் சயீத் மீது விரைவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என மத்திய மந்திரி குர்ரம் தஸ்தகிர் தெரிவித்துள்ளார். சயீத் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, அனைத்து துறை அதிகாரிகளிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டதாகவும், சயீத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

இதேபோல் ஜமாத் உத் தவா மற்றும் அதன் பாலா இ இன்சானியத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும், மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் பஞ்சாப் சட்ட மந்திரி ராணா சனாவுல்லா தெரிவித்தார்.

ஹபீஸ் சயீத் மீதான நடவடிக்கையை ஹிஜ்புல் முஜாகிதீன் தலைவர் சையத் சலாஹூதீன் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.