பாதுகாப்புத்தரப்பினருக்கு மிதமிஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு ஐ.நா. கடும் கண்டனம்

121 0

பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள், மிதஞ்சிய படையினரின் பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள் உள்ளடங்கலாக ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளமையைக் கடுமையாகக் கண்டிப்பதாக ஒன்றுகூடுதலுக்கான சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமன்ற் வொயூல் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன், கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் வன்முறைச்சம்பவங்களும் பதிவாகியிருந்தன. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் மேற்கண்டவாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:</p>
<p>’பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள், மிதஞ்சிய படையினரின் பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள் உள்ளடங்கலாக ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளமையை நான் கடுமையாகக் கண்டிக்கின்றேன்.

அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதை நிறுத்திக்கொள்வதுடன், அவர்களது உரிமைகளுக்கு மதிப்பளித்துப் பாதுகாக்கவேண்டும். மாறாக அவர்களை அமைதிப்படுத்துவது முறையான பதிலாக இருக்காது’ என்ற தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

நாடளாவிய ரீதியில் சிறுவர் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகள் எவ்வித இடையூறுமின்றித் தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதேவேளை தற்போது சிறுவர்கள் அன்றாடம் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு உதவுவது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தினரினதும் கடமையாகும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.