மாணவன் கொலை – சாட்சி பதிவுகள் ஆரம்பம்

299 0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி துடுப்பாட்ட விளையாட்டின் போது ஒருவர் அடித்து கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரனையின் மூன்றாவது சாட்சியாளரின் சாட்சிய பதிவானது இடை நிறுத்தப்பட்டு எனைய சாட்சிப் பதிவுகளுக்காக நாளைய தினம் வரை ஒத்திவைக்க யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ்க்கும் இடையில் இடம்பெற்ற துடுப்பாட்ட போட்டியின் போது இரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சென் பற்றிக்ஸ் பாடசாலையின் பழைய மாணவனான ஜெயரட்ணம் தனுசன் அமலன் என்பவர் சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண கல்லூரியின் மாணவர்கள் ஆறு பேரினை கைது செய்து அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரனையானது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்திருந்தது.

இதனை தொடர்ந்து இவ் வழக்கு விசாரனையானது சட்டமா அதிபரால் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்.மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ் வழக்கின் மூன்றாவது சாட்சியின் சாட்சி பதிவானது இடம்பெற்றிருந்தது.

இதன்போது குறித்த சாட்சியின் பொலிஸ் வாக்குமூலமும் இன்றையதினம் மன்றில் வழங்கிய வாக்குமூலமும் முரண்பட்டிருந்ததுடன் குறித்த சாட்சியிடம் ஊர்காவற்றுறை பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்திருந்ததாக குறித்த சாட்சி மன்றில் தெரிவித்திருந்த நிலையில் அவ் ஊர்காவற்றுறை பொலிஸார் பெற்றுக்கொண்ட சாட்சியத்தையும் தமக்கு வழங்க வேண்டும் என எதிரி தரப்பின் 1ஆவது எதிரி தரப்பு சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுமந்திரன் விண்ணப்பமொன்றை செய்திருந்தார்.

இதனையடுத்து குறித்த சாட்சிய பதிவானது இடைநிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடர்ந்து இவ் வழக்கின் எனைய சாட்சிய பதிவானது இடம்பெறும் என தெரிவித்து இன்றைய தினம் வரை இவ் வழக்கை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.