ஜல்லிக்கட்டு 5-ந்தேதி நடைபெறுவதையொட்டி அவனியாபுரத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்றவை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் வருடந்தோறும் தை முதல் தேதியன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். உச்சநீதிமன்றம் தடை இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக நடக்க வில்லை. தற்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் அவனியாபுரத்தில் 5-ந் தேதியும், பாலமேட்டில் 9-ந் தேதியும், அலங்காநல்லூரில் 10-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளன.
முதலில் அவனியாபுரத்தில் நடைபெற உள்ளதால் அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள குருநாதன் கோவில் முன்பு, இன்று காலை விழா கமிட்டியினர், கிராமத்தினர் முன்னிலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வாடிவாசல் அமைக்கும் இடத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதனை தொடர்ந்து வாடிவாசல் அமைக்கும் பணிகள் தொடங்கியது. பார்வையாளர்கள் போட்டியை பார்ப்பதற்கு வசதியாக தடுப்புகள், கேலரிகள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மாடுபிடிக்கும் வீரர்களின் பெயர்கள் நாளை முதல் பதிவு செய்யப்பட்ட உள்ளது. காளை வளர்ப்போர் தங்களது காளைகளை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க செய்ய ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

