ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர மேலும் 2 அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். வருகிற 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் அவர் அரசியல் திட்டத்தை அறிவிக்கிறார்.
இதையடுத்து தி.நகரில் உள்ள அவரது வீட்டில் தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தினமும் மாலையில் தீபா தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் ஏற்கனவே தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சீர்காழி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரமோகன், மூர்த்தி ஆகியோர் தீபாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி தொடங்கியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்தோம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்த போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தோம். தற்போது தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நிர்வாகிகளுடன் சந்தித்து பேசுவதற்காக தீபா தனியாக கட்சி அலுவலகம் தொடங்குகிறார். இதற்காக தி.நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கட்சி அலுவலகம் திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.நாகை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம், சங்கரன்பந்தலில் ஜெ.தீபா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிள்ளியூர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
ஜெ.தீபா பேரவைக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது. செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு செயலாளர்களை நியமிப்பது, 24-ந்தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, வருகிற உள்ளாட்சி தேர்தலில் ஜெ.தீபா அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது, மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஜெ.தீபாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

