சைட்டம் பட்டம் செல்லுபடியானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

237 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளியேறும் மாணவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்ய கொள்ள முடியும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று அறிவித்தது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்தார்.

அந்த விண்ணப்பம் இலங்கை மருத்துவ சபையால் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த மாணவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளிட்ட 17 பேர் அந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

குறித்த மனு மீதான விசாரணையின் முடிவிலேயே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

சைட்டம் நிறுவனமானது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக செயற்படுகின்றது.

அதன்படி, அந்த நிறுவனம் வழங்கும் பட்டமானது சட்டபூர்வமானது எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதன் காரணமாக மருத்துவ சபையினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை எதிர்ப்பு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அத்துடன், மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை மருத்துவ சபைக்கு எந்தவித சட்ட சிக்கலும் இல்லை எனவும், அந்த பட்டதாரிகளை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மாலபே தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றனர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் மேலும் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் நலின் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.