சுமந்திரனைக் கொல்லும் முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது!

250 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், மற்றொரு சந்தேகநபர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த விஜயன் என்பவரே மன்னாரில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட நால்வரிடமும் நடாத்தப்பட்ட விசாரணைகளையடுத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களும், போதைப்பொருள் குற்றச்சாட்டு மற்றும் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்யும் சதி குற்றச்சாட்டின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்றையதினம் பயங்கரவாத குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் நீதிமன்றத்தில் மூன்று அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன் குறித்த ஐந்து சந்தேக நபர்களினதும் தொலைத்தொடர்பு இலக்கங்களைப் பரிசோதனை செய்வதற்கும் நீதிமன்றத்திடம் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின்பேரில் ஏற்கனவே திருகோணமலையைச் சேர்ந்த ஞானசேகரலிங்கம் ராஜ்மதன், மருதங்கேணியைச் சேர்ந்த லூயிஸ் மரியாம்பிள்ளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களான முருகையா தவேந்திரன் மற்றும் காராளசிங்கம் குலேந்திரன் ஆகியோர் கடந்த 14ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் கிளைமோர் குண்டுகள், அவற்றை வெடிக்கவைக்கும் வயர்கள், பெருமளவு கேரளா கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கடந்த 20ஆம் நாள் பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் தற்போது அனுராதபுரம் நீதிமன்றத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு இவர்களது சட்டவாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இவர்கள் அனைவரையும் எதிர்வரும் 13ஆம் நாள் வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இவர்கள் எவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.