திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி பிரமாண்ட மாநில மாநாடு: தீபா ஆதரவாளர்கள் தீவிரம்

230 0

திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.இளவழகன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் கல்லூரி சாலையில் ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.இளவழகன் திறந்து வைத்து பேசியதாவது:-

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மக்களால் சகித்து கொள்ள முடியாத நிகழ்வுகள் ஆட்சியிலும், கட்சியிலும் நடைபெற்று வருகின்றன. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க.வில் 2,600 பேர் மட்டுமே ஒரு நபரை பொறுப்பு பொதுச்செயலாளராக நியமித்துள்ளனர்.

சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை உண்மையான கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 99.90 சதவீத தொண்டர்கள் ஜெ.தீபாவுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளனர்.

திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி ஜெ.தீபா கலந்து கொள்ளும் மாநில மாநாடு நடைபெற உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் ஜெ. தீபா நிறுத்தும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். அதன் பிறகு ஆட்சியும், கட்சியும் அவரை தேடி வரும் சூழ்நிலை உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் பெரம்பலூரில் நடந்த தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. 1.50 கோடி தொண்டர்கள் தீபா பக்கம் உள்ளனர். தீபா அ.தி.மு.க. பொதுச்செயலாளராகி முதல்வராக பதவியேற்கும் காலம் வெகு விரைவில் வரும். சசிகலாவிற்கு எதிராக 1.50கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் அம்பு, வருகிற தேர்தலில் வாக்குகளாக பாயும்.
சட்டரீதியாக தீபா பேரவை தொடங்கப்பட உள்ளது. அதற்கான அதிகாரபூர்வமான உறுப்பினர் படிவம் விரைவில் வழங்கப்படும். மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் புரட்சி மலர் தீபா அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்க வேண்டும். தீபா தலைமையில் அனைவரும் அணிவகுப்போம் என உறுதி மொழி ஏற்றனர்.