மெய்வல்லுநர் வீராங்கனை மதுஷானி தற்கொலை

341 0

இலங்கை மெய்வல்லுநர் வீராங்கனை கௌஷல்யா மதுஷானி (27 வயது)  தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.

400 மீற்றர் தடைதாண்டி ஓட்ட வீராங்கனையான மதுஷானி, தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் வைத்தே உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இலங்கை மெய்வல்லுநர் நிறுவனத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட நுற்றாண்டு தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய கௌஷல்யா மதுஷானி தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.

இராணுவம் சார்பாக பங்குபற்றிய கௌஷல்யா மதுஷானி, பெண்களுக்கான அதிசிறந்த மெய்வல்லுநர் ஆற்றல் வெளிப்பாட்டுக்கான விருதையும் வென்றிருந்தார்.

நேபாளத்தில் நடைபெற்ற 2019 தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் கௌஷல்யா மதுஷானி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

நூற்றாண்டு தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற போதிலும் கடும் மழை காரணமாக பிற்போடப்பட்ட சில போட்டிகளும் பரிசளிப்பு வைபவமும் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் சனிக்கிழமையன்று (23) நடைபெற்றது.

பரிசளிப்பு வைபவத்தில் கலந்துகொண்ட கௌஷல்யா மதுஷானி, பெண்களுக்கான சட்டவேலி ஓட்டப் போட்டியில் அதிசிறந்த   மெய்வல்லுநர் ஆற்றல் வெளிப்பாட்டுக்கான கிண்ணத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.