ரம்புக்கனை சம்பவம் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதுவர்

325 0

நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டாக்காரர்கள் மீதான வன்முறை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று ரம்புக்கனை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டமை மற்றும் இதன் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதற்கமைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , ‘எந்தவொரு தரப்பினர் மீதான வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும் , ரம்புக்கனை சம்பவம் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை அவசியம் என்பதோடு, அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.’ என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரையும் சந்தித்து இவ்விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டர் பதிவில் ,

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையினால் இழைக்கப்பட்ட அநீதி மற்றும் ரம்புக்கனை வன்முறை தொடர்பில் முழுமையான, வெளிப்படையான விசாரணையின் தேவை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்பட்டது.

அமைதியான போராட்டக்காரர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் பணியைத் தவிர வேறு எந்தவொரு விடயமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முக்கியமானதாக இருந்ததில்லை.’ என்று குறிப்பிட்டுள்ளார்.