முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மீண்டும் ஆரம்பித்துள்ளது-றூபவதி கேதீஸ்வரன்

338 0

முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவரினால் எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அவரின் ஆலோசனைக்கு ஏற்ப இவ்விடயத்தை கடற்படையினருக்கு அறிவித்துள்ளேன்.

முல்லைத்தீவுக் கடலிலே இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் பல்வேறு வழியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறான பேச்சுவார்த்தைகள் நடாத்திய நிலையில் ஓய்ந்திருந்த இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மீண்டும் ஆரம்பித்துள்ளது. எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ச்சியாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.