நெருக்கடி கொடுத்த சர்வதேசம்! தேர்தலை திடீரென நடத்திய மஹிந்த!

215 0

சர்வதேசத்தின் பாரிய அழுத்தம் காரணமாகவே மஹிந்த முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார் என்று அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்

“மஹிந்த ஆட்சியில் பொருளாதார நெருக்கடி இருந்தது உண்மை. அந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான ஆற்றல் மஹிந்தவிடம் இருக்கவில்லை. அதைத் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பத்தை சர்வதேசம் வழங்கவும் இல்லை. மஹிந்த மிகவும் திண்டாடத் தொடங்கி விட்டார்.

இந்தநிலையில், பொருளாதாரப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காக மஹிந்த காணிகளை தனியாருக்கு விற்கவும் செய்தார். இதற்கு எதிராக நான் அமைச்சரவைக்குள் குரல் எழுப்பிய போதும், பெரும்பான்மை குரல்கள் மூலம் எனது குரல் தோற்கடிக்கப்பட்டது.

அரச காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்க முடியாது என்ற சட்டத்தை ரணில் விக்கிரமசிங்க 2002 இல் பிரதமராக இருந்தபோது நிறைவேற்றினார். அந்தச் சட்டத்தை மீறித்தான் மஹிந்த நிலங்களை விற்றார். அதை மறந்துவிட்டு இந்த அரசு காணிகளை விற்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்.

இந்த அரசில் காணிகள் விற்கப்படவில்லை. தனியாருடன் சேர்ந்து பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்தவகையில்தான், அம்பாந்தோட்டையில் வர்த்தக வலயம் அமைக்கப்படுகின்றது” – என்றார்.