லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- மரியுபோல் நகரம் அபாய கட்டத்தில் உள்ளதாக உக்ரைன் வெளியுறவு மந்திரி தகவல்

141 0

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 54-வது நாளாக நீடித்து வருகிறது. கீவ், கார்கிவ், மரியுபோல் பகுதிகளில் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

18.04.2022
 
06.30: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனில் போருக்கு பிந்தைய சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநருடன் விவாதிக்க ஜெலன்ஸ்கி  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
04.00: கார்கிவ் நகரத்தில் ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு  தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதலால் குடியிருப்பு மற்றும் அரசு நிர்வாக கட்டிடங்கள் தீ பிடித்து எரிந்ததாகவும், உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3.30: உக்ரைன் துறைமுக நகரான மரியுபோலில் நிலைமை அபாய கட்டத்தில் உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் வெளியுறவு அமைச்சகங்கள் மட்டத்தில் எந்த ஒரு தூதரக தொடர்பும்  இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2.30: ரஷிய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புரோவரியில் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக அப்பகுதி மேயர் இகோர் சபோஷ்கோ கூறியுள்ளார்.
01.20:  உக்ரைனில் போர் நடைபெறும் நகரப்பகுதிகளில் மனிதாபிமான மீறல் மற்றும் நெருக்கடி காணப்படுவதாகவும், தங்களது தரப்பு ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
12.40: இந்த வார இறுதியில் அல்லது வாரத்தின் தொடக்கத்தில் ரஷிய ராணுவம் தனது படைகளில் சிலவற்றை மீண்டும் உக்ரைனுக்கு நகர்த்தத் தொடங்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
17.04.2022
22.00: மரியுபோலில் உள்ள உக்ரைன் படைகள் சரணடையவில்லை என்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கூறி உள்ளார். மரியுபோலில் எஞ்சியிருக்கும் உக்ரைன் படைகள் சரணடைய வேண்டும் என்ற ரஷியாவின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
18.00: ரஷியாவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியிலும் மரியுபோலின் முக்கிய துறைமுகம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் கூறி உள்ளார்.  அசோவ் துறைமுகத்தின் முக்கியக் கடற்படை வீரர்கள் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷியப் படை வீரர்களை பிடித்து வைத்திருப்பதாக ஹன்னா மல்யார் கூறினார்.
சுற்றி வளைக்கும் ரஷிய துருப்புக்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு முன்னேறுவதைத் தடுக்கும் `கேடயமாக மரியுபோல் நகரம் விளங்குவதாக குறிப்பிட்ட அவர், ரஷியர்கள் மரியுபோல் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருவதாக கூறினார். நகரத்தில் ரஷியா தங்கள் படைகளை வலுப்படுத்துவதற்காக அதிக வீரர்களை இறக்க தயாராகி வருவதாகவும் மல்யார் கூறினார்.
17.00: உக்ரைன் மீது ரஷிய அதிபர் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். நான் மட்டுமல்ல, உலகம் முழுவதும், அனைத்து நாடுகளும் கவலைப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
13.35: மரியுபோல் நகரில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி விட்டோம் என்று ரஷியா அறிவித்துள்ளது. அந்நகரம் உக்ரைன் படையிடம் இருந்து அகற்றப்பட்டது என்றும் சில வீரர்கள் சரண் அடைய மட்டுமே புறநகர் பகுதியில் உள்ளனர் என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷியா கெடு விதித்துள்ளது. மரியுபோல் நகரில் இன்றும் சண்டையிடும் உக்ரைன் வீரர்கள் சரண் அடைய கெடு விதிக்கப்படுகிறது. அவர்கள் இன்று காலை 6 மணி முதல் (மாஸ்கோ நேரம்) தங்களது ஆயுதங்களை போட்டு விட்டு உயிரை காப்பாற்றி கொள்ள சரண் அடைய வேண்டும் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
10.00: மரியுபோலின் தலைவிதியை போர் அல்லது ராஜதந்திரம் மூலம் தீர்மானிக்க முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மரியுபோலின் நிலைமை மனிதாபிமானமற்றது. ரஷியா அங்குள்ள அனைவரையும் வேண்டுமென்றே அழிக்க முயற்சிக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
06.40: உக்ரைன் போரில் ரஷிய ராணுவ ஜெனரல் விளாடிமிர் ஃப்ரோலோவ் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கல்லறையில் புதைக்கப்பட்டதாகவும் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ் தெரிவித்துள்ளார்.
03.10: உக்ரைன் தலைநகர் உள்பட பிற நகரங்கள் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்களை தொடங்கி உள்ளது. தனது போர் கப்பலை இழந்து விட்ட நிலையில், உக்ரைன் மேற்கு நகரங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்துமாறு ரஷிய ராணுவ தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உக்ரைன் ராணுவ தளங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ரஷிய படைகள் தெரிவித்துள்ளன.
02.20: ரஷியா இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் உக்ரைனில் தனது அடுத்த கட்ட தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கலாம் என அமெரிக்க ராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து உக்ரைனுக்கு அதிக பீரங்கி மற்றும் வெடிமருந்துகளை அனுப்ப வேண்டும் என்று தோழமை நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
01.29: மரியுபோல் நகரின் அனைத்துப் பகுதிகளையும் உக்ரைன் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போரின்போது ஏப்ரல் 16 ஆம் தேதி வரை,  துறைமுக நகரமான மரியுபோலில் உக்ரைன் ராணுவம் 4 ஆயிரம் வீரர்களை இழந்து விட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
12.40: போர் நடைபெறும் உக்ரைன் நகரங்களில் இருந்து சனிக்கிழமை மட்டும் 1,449 பொதுமக்கள் மனிதாபிமான பாதைகள் வழியே வெளியேற்றப் பட்டுள்ளதாக உக்ரைன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.