சென்னையில் மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உட்பட 6 இடங்களில் 144 தடை உத்தரவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்த இந்த உத்தரவு அடுத்த மாதம் 12ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 பேருக்கு மேல் கூடினால் போலீசார் கைது செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக நிரந்தர சட்டம் கொண்டு வரக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17ம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன்பயனாக தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால், மாணவர்கள் நிரந்தர சட்டம் கொண்டு வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் தெரிவித்தனர். மாணவர்களின் இந்த அமைதி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் தினமும் மெரினா கடற்கரைக்கு வந்து சென்றனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக குடியரசு தின விழா நிகழ்ச்சி பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணியளவில் மெரினா கடற்கரையில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது மாணவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டன. அங்கிருந்து கலைந்து சென்ற மாணவர்கள், இளைஞர்கள் மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்துவதை கண்டித்து சென்னையில் ஆங்காங்கே மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரை நோக்கி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள் வந்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
வன்முறை, தீவைப்பு: அப்போது ஏற்பட்ட வன்முறையில் 100க்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. நடுக்குப்பத்தில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் குடிசை வீடுகளும் இந்த வன்முறையில் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 310 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு போலீசார் தான் காரணம் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், திமுக சார்பில் வாகனங்கள், குடிசைகளுக்கு போலீசார் தீ வைத்த வீடியோ ஆதாரங்களை கவர்னரிடம் அளித்து நீதி விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் தினமும் பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட மக்களையும், போலீசாரால் எரிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், மாணவர்கள் போராட்டம் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் 3 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த மெரினா கடற்கரை சாலை கடந்த 26ம் தேதி பிற்பகலில் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.
போலீஸ் குவிப்பு: இந்த சூழ்நிலையில் இன்று விடுமுறை என்பதால் மெரினா கடற்கரைக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று கூடவிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து வாட்ஸ் அப்பிலும் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான போலீசார் நேற்று காலை முதல் குவிக்கப்பட்டனர். மெரினா கடற்கரையை இணைக்கும் வாலாஜா சாலை, சிவானந்தா சாலை, ராஜாஜி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, சாந்தோம் சாலை என 7 சாலைகளில் பேரி கார்டு அமைக்கப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மெரினா கடற்கரைக்குள் நுழையும் வழியிலும் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று திடீரென ஆயிரக்கணக்கான போலீசார் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
144 தடை: இந்தநிலையில் நேற்று இரவு மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: மெரினா கடற்கரை பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு காரணங்களுக்காக மீண்டும் ஒன்று சேருவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த செய்திகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது போன்ற சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளை மாணவர்கள், இளைஞர்கள் யாரும் நம்ப வேண்டாம். மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக கூடுவதற்கு ஏற்கனவே தடை உள்ளது. இந்த சூழ்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் வகையிலும் சமூகத்திற்கு விரோதமாகவும், இந்தியா இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படுவதை தடுக்கும் வகையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி மெரினா, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ், பட்டினபாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசதுக்கம் ஆகிய காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வரும் பிப்ரவரி 12ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அதாவது 15 நாட்கள் அமலில் இருக்கும்.
இந்த உத்தரவின் படி மெரினா மற்றும் அதன்சுற்று வட்டாரப்பகுதியில் ஒரு இடத்தில் 4 பேருக்கு மேல் கூடுதல், உண்ணா விரதம், போராட்டம், மனித சங்கலி, கூட்டம் போடுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவதார்கள்.
அதே நேரத்தில் குடும்பத்துடனும் ஓய்வு எடுப்பதற்காக வருபவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் எந்த வித தடையும் இல்லை. இந்த உத்தரவுக்கு சென்னை மக்கள் அனைவரும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்களின் தேவையற்ற சிரமங்களுக்கு மிகவும் வருந்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மெரினாவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா நினைவுநாள் பேரணி நடக்குமா?
அண்ணாவின் 48வது நினைவு தினம் அடுத்த மாதம் 3ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது, திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அண்ணா நினைவிடத்துக்கு ஊர்வலமாகச் சென்று அவரது சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டும் அஞ்சலி ஊர்வலம் நடைபெறும் என்று ஏற்கனவே திமுக அறிவித்துள்ளது. மற்ற கட்சிகளும் ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளனர். இந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்படுமா? அல்லது அதற்கும் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கமிஷனர் தனி உத்தரவு ஏன்?
சென்னை மாநகர போலீசுக்கென்று தனியாக சட்டம் 1888ம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது. அதற்கு ‘‘சென்னை மாநகர போலீஸ் சட்டம்’’ என்று அழைக்கப்படுகிறது. அதன்41வது பிரிவின் கீழ் நகரில் தடை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு அது 15 நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த தடை உத்தரவு தற்போதும் அமலில் உள்ளது. அதனால்தான் சென்னையில் ஊர்வலம், ஆர்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களுக்கு போலீசாரிடம் முன் அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி சென்னை நகர் முழுவதும் தடைச் சட்டம் அமலில் இருக்கும்போது, தற்போது குறிப்பிட்ட 6 இடங்களுக்கு மட்டும் கிரிமினல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு போடப்படுவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவித்திருப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்களும், சட்ட வல்லுநர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

