பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பதற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், இவ்வருடத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி உதவுமாறு பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கம் கோரியிருக்கின்றது.
நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பாட்டிருக்கும் நிலையில், பச்சிளம் குழந்தைகளின் உயிர்ப்பாதுகாப்பிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்குமாறு வலியுறுத்தி, அவற்றின் பெயர்கள் மற்றும் அளவுப்பிரமாணம் என்பவற்றை உள்ளடக்கி பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கத்தின் தலைவரும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிரேஷ்ட மருத்துவருமான வைத்தியநிபுணர் எல்.பி.சி.சமன் குமாரவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பச்சிளம் குழந்தைகளின் இறப்புவீதத்தைப் பொறுத்தமட்டில் இலங்கையானது தெற்காசியாவிலேயே சிறந்த மட்டத்தைப் பேணிவருகின்றது
எமது நாட்டின் பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு வசதி குறித்துப் பெருமையடைவதுடன், நாம் 23 வாரங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கின்றோம்.
இங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்றவர்கள் என்பதுடன், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கியமைக்காக அவ்விரு அரசாங்கங்களுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.
துரதிஷ்டவசமாகத் தற்போது எமது நாடு பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி அரசியல் ரீதியிலும் மிகவும் கடினமானதொரு காலப்பகுதியில் இருக்கின்றது.
வைத்தியசாலைகளில் மிகவும் முக்கியமான மருந்துப்பொருட்கள் கையிருப்பில் இல்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் முதலாவது பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வையேனும் கண்டடைவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்குத் தீர்மானித்திருக்கின்றேன்.
பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பைப் பொறுத்தமட்டில் இப்போது நாம் முகங்கொடுத்திருக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால், வாதனாளிக்குள் புகுத்தப்படும் குழாய்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையாகும்.
கையிருப்பில் இருந்த அனைத்துக் குழாய்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், இன்னும் சில வாரங்களில் அந்தக் குழாய்களைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையேற்படும்.
>அதன் காரணமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாதனாளிக்குள் புகுத்தப்படும் குழாய்களை அப்புறப்படுத்தவேண்டாம் என்றும், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நாம் விரும்பாவிட்டாலும்கூட அவற்றை மீளப்பயன்படுத்தவேண்டிய நிலையேற்படலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கின்றேன்.
;ஆகவே இயலுமானவரை வாதனாளிக்குள் புகுத்தப்படும் குழாய்கள், பச்சிளம் குழந்தைகளுக்கான சுவாசக்கருவிகள் மற்றும் ஏனைய பயன்தரக்கூடிய மருத்துவ உபகரணங்களை அனுப்பிவைக்குமாறு தயவாகக் கேட்டுகொள்கின்றேன்.
அதுமாத்திரமன்றி மிகவும் அத்தியாவசியமானதும், இலங்கையில் வெகுவிரைவில் பற்றாக்குறை ஏற்படக்கூடியதுமான மருத்துவ உபகரணங்களின் பட்டியலையும் இதனுடன் இணைத்திருக்கின்றேன்.
ஆகவே எனது கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, உயிர்களைக் காப்பதற்கு எமக்கு உதவிகளை வழங்குவீர்கள் என்று நம்புகின்றேன்
இதில் கோரப்பட்டுள்ள மருத்துவ உபகரண நன்கொடைகளை சுகாதார அமைச்சின் மருத்துவ உபகரண வசதிகள் விநியோகப்பிரிவின் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

