புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக வசந்த குமாரி கமலக் கண்ணனும், துணை மேயராக காமராஜும் உள்ளனர்.
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடந்தது. துணைமேயர் காமராஜ், ஆணையர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது இந்த கூட்டத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாதாரண கூட்டத்தில் 171 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சொத்து வரி உயர்வு, நகராட்சிகளில் சரிவர பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி எதிர்க்கட்சித்தலைவர் சங்கர் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர் 8 பேர், ஒரு த.மா.கா. உறுப்பினர் மற்றும் சுயேட்சை உறுப்பினர் ஒருவர் என மொத்தம் 10 உறுப்பினர்கள் முதல் கூட்டத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்தனர். இதில் 3 பேர் பெண் உறுப்பினர்கள் ஆவர்.

