போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் தேர்வில் 47 பெண்கள் உள்பட 894 பேர் வெற்றி பெற்றதாக இந்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) மற்றும் மத்திய ஆயுதப்படை போலீஸ் பிரிவு (சி.ஏ.பி.எப்) ஆகியவற்றுக்கான உதவி சப்-இன்ஸ்பெக்டர், டெல்லி காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு -2019 இந்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
இதையடுத்து எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு, உள்ளிட்ட பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையடுத்து இறுதி தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதில் சில அச்சுப் பிழைகள் இருப்பது ஆணையத்தின் கவனத்துக்கு சென்றது. இதனை தொடர்ந்து இவை, எந்தவொரு விண்ணப்பதாரரின் தேர்வு முடிவையும் பாதிக்காது என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பெண்கள் இட ஒதுக்கீட்டின்படி பதவி குறியீடு ஏ பிரிவில் மொத்த மதிப்பெண் 302.25, டி பிரிவில் 268.23 என மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 49 பணியிடங்களில் 47 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் ஆண்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் டி பிரிவில் மொத்த மதிப்பெண் 245.06, 251.88, 261.32 மற்றும் எப் பிரிவில் 299.96 என நிர்ணயிக்கப்பட்டு 850 பணியிடங்களில் 847 ஆண்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

