மின்னல் தாக்கி வீடொன்று பலத்த சேதம்

246 0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட வித்தியாபுரம் கிராமத்தில் இடிமின்னல் தாக்கத்திற்குள்ளாக வீடு ஒன்று சேதமடைந்துள்ளதுடன், குறித்த குடுப்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை மின்சாரம் தடைப்பட்ட வேளை மழைபெய்து கொண்டிருந்தவேளை இடி மின்னல் தாக்கி வீடு ஒன்று அதிகளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் இலத்திரனியல் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் செல்லத்துரை யசோதரன் என்ற இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் குடும்பம் ஒன்றின் வீட்டின் மீது இடிமின்னல் தாக்கியுள்ளது. இதன்போது வீட்டின் கூரை, ஓடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

வீட்டில் உள்ள அனைத்து இலத்திரனியல் பொருட்கள் வீட்டிற்கான மின் இணைப்பு மற்றும் ஆழிகள் அனைத்து எரிந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பம் தெரிவித்துள்ளது. சுமார் 7 இலட்சம் வரை சேதமடைந்துள்ளதுடன், குடும்பஸ்தருக்குக் காது ஒன்று கேட்காத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த வீட்டில் வாழமுடியாத நிலையில் தற்போது தற்காலிக வீட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். 2018 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் தரப்பட்ட 7.5 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டத்தில் 1.5 இலட்சம் ரூபா மட்டும் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட நிலையில், கடன் பட்டு இந்த வீட்டினை கட்டிமுடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

தற்போது குடும்பம் குறித்த வீட்டில் வாழமுடியாத நிலை காணப்படுவதாகவும் உதவி செய்ய முன்வருபவர்கள் யாராவது தங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.