சுயமாக இயங்கும் நிலைப்பாடு

278 0

அரசாங்கத்திற்கு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்பலைகள் காரணமாக பல இடங்களிலும் மூவின மக்களும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையால் இலங்கையின் நாணயத்தின் பெறுமதி என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்புக்கள் ஏற்பட்டுள்ளன

இந்தப் பின்னணியில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும். அரசாங்கத்தை கலைக்க வேண்டுமென்ற கோஷங்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் எங்களுக்கு வேண்டாம். புதியவர்களை, நாட்டுக்காக சிந்திக்கக் கூடியவர்களைரூபவ் படித்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்ற கோஷங்களும் முன் வைக்கப்படுகின்றன.

இன்றைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாத்தை பௌத்த கடும்போக்கு இனவாத தேரர்களின் துணையோடு சிங்கள மக்களிடையே விதைத்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்கள்.

நாட்டை பல துறைகளிலும் முன்னேற்றுவோம். ஊழலை இல்லாமல் செய்வோம். ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்போம் என பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சியை பிடித்துக் கொண்டார்கள். இவர்களின் வாக்குறுதிகளை நம்பி 69 இலட்சம் மக்கள் குறிப்பாக பௌத்த சிங்களவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார்கள்.

>பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக் கொண்டார்கள். ஆயினும் இவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நாட்டின் எல்லாத்துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் பல மணித்தியாலங்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவலநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இத்தகையதொரு நிலை இதுவரை எந்தவொரு ஆட்சியின் போது ஏற்படவில்லை.

இந்தப் பின்னணியில் தற்போதைய ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொண்டு 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கும், அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட ஏனைய சட்ட மூலங்களுக்கும் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் கட்சிகளின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளன.

முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆர்ப்பாட்ட பேரணிகளில் இவர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இதனால் இந்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் தாம் தமது கட்சிகளின் தீர்மானங்களை புறக்கணித்துக் கொண்டு, கட்சியின் தலைமைக்கு எதிராக கருத்துக்களையும் முன் வைத்துக் கொண்டமையால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் எத்தகையதொரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு மக்களிடம் வாக்குகளை கேட்க முடியுமென்ற கையறு நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் வீடுகள் மற்றும் அலுவலங்களுக்கு பலத்த பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முதுநபீன் முஷரப் தாம் அரசாங்கத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற ஆதரவு நிலையில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயமாக இயங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இவரைப் பொறுத்தவரை. இவர் அரசியலுக்கு புதியவர். கடந்த பாராளுமன்றத் தேர்தல் மூலமாக அரசியலுக்கு வந்தவர். சட்டத்தரணியான இவரின் வெற்றி பொத்துவில் பிரதேசத்திற்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. இருந்த போதிலும், இவரிடம் அரசியல் ரீதியாக நிலையான, தூரநோக்கு இருப்பதாக தெரியவில்லை.

பொத்துவில் எனும் பிரதேசவாதத்தை மாத்திரம் முன்வைத்து தமது தேவைக்கு ஏற்ப அரசியல் முடிவுகளை எடுக்கின்ற ஒருவராகவே அடையாளங் காணப்பட்டுள்ளார்.

தேர்தல் காலங்களில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான கோசங்களை முன் வைத்தார். முஸ்லிம்கள் எந்தக் காரணம் கொண்டு அந்த அணிக்கு வாக்களிக்கக் கூடாதென்றும் பிரச்சாரம் செய்தார். கட்சியின் தலைவரின் கோட்டை தாண்டமாட்டேன் என்றும் உறுதி கூறினார்.

தேர்தல் முடிந்ததும் தமது கருத்துக்களுக்கு மாற்றமாக இன்றைய ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டார். அமைச்சர் பதவியையும் குறிவைத்துக் கொண்டார். ஆட்சியாளர்கள் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள முக்கிய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவில்லை. மாறாக ஒரு வீதிகளை புனரமைப்பு செய்வதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை ஆட்சியாளர்கள் செய்தார்கள். பொத்துவில் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் காலத்திற்கு காலம் செய்த அதே வேலைகளையே இவரும் செய்தார்.

கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றாக செயற்பட்ட இவருக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பஷில்ராஜபக்ஷ நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு தாமும் பங்களிப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். வீழ்ச்சியடைந்து கொண்டு போகின்ற பொருளாதாரத்தை பசில் முன்னேற்றுவார். அவருக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தினால் பலவற்றை சாதிக்க முடியுமென்று சொல்லிக் கொண்டார். பஷில் குறித்து இவரைத் தவிர வேறு எவரும் இவ்வாறு அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.

பஷில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரம் இன்னும் மிகமோசமான நிலையை அடைந்துள்ளது. இத்தகைய நிலையில்தான் தாம் பாராளுமன்றத்தில் சுயதீனமாக இயங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்சியாளர்களுக்கு எதிராக செயற்படவுள்ளேம் என்று அவரால் மொழிய முடியவில்லை. சுயதீனமாக செயற்படல் என்பது கூட ஆளுந் தரப்புக்கு ஆதரவானதொரு நிலைப்பாடு என்றும் சொல்லலாம். இவ்வாறு அடிக்கடி தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கின்ற முஷரப்புக்கு பொத்தவில் பிரதேசத்திலேயே எதிர்ப்பலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தாம் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வதாகவும் கட்சியின் தீர்மானத்திற்கு ஏற்ப செய்றபட இருப்பதாகவும் பலடி அடித்துள்ளார். முஸ்லிம் வாக்காளர்கள் எதனைச் சொன்னாலும் நம்பிக் கொள்வார்கள் என்று நினைத்துள்ளார்.

அவர் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸும் வழக்கம் போல் மன்னிப்பு வழங்கி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கும். ஆனால், இவர்கள் எவ்வாறு தாம் நினைத்த போதெல்லாம் தங்களுக்கு ஏற்றாற்போல் தீர்மானங்களை மாற்றிக் கொள்கின்றார்கள் என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்சியின் கட்டுப்பாடு, சமூகப் பொறுப்பு என்று எதுவுமே இவர்களின் தீர்மானங்களில் காணப்படவில்லை. தங்களின் சுய அரசியலுக்காக மக்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதேவேளைரூபவ் ஏனைய 05 பாராளுமன்ற உறுப்பினர்களும் தாம் நிலைப்பாடு குறித்து இப்பத்தி எழுதும் வரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

அதனால், அவர்கள் இன்னும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவானதொரு நிலையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள் எனலாம். சில வேளை தாமும் பாராளுமன்றத்தில் சுயமான இயங்க உள்ளதாகக் கூட அறிவிக்கலாம்.

எம்.எஸ்.தீன்