மக்களின் வெறுப்பை முழுமையாக பெற்றுள்ள ஜனாதிபதி உட்பட அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மகாசங்கத்தினரது தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் மகாசங்கத்தினரை விமர்சிப்பது முற்றிலும் தவறானது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
எம்பிலிபிடிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
<p>அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் தவறான நிதி முகாமைத்துவத்தினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.கொவிட் தாக்கத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என அரசாங்கம் குறிப்பிடும் காரணத்தை நாட்டு மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள போவதில்லை.
கொவிட் பெருந்தொற்று தாக்கத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இலங்கையை காட்டிலும் பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்ட நாடுகள் கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் அளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளதை அவதானித்திற்குரியது.
நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை.எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்சாரத்துறை ஆகிய அடிப்படை சேவை விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றினைந்து வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்
ஜனாதிபதி உட்பட அவர் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் கடுமையாக வெறுக்கிறார்கள். ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பது மகாசங்கத்தினரது தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.போராட்டத்தில் ஈடுப்படுவோர் மகாசங்கத்தினரை விமர்சிப்பது முற்றிலும் தவறானது.
அரசதலைவர்களை நல்வழிப்படுத்தி ஆட்சியதிகாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கான ஆலோசனை வழங்கும் பொறுப்பு மகாசங்கத்pனருக்கு உண்டு
நல்ல ஆலோசனைகளை ஆட்சியாளர்கள் கேட்க மறுத்தால் மக்களால் அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதற்கு தற்போதைய நிலைமை சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.
</div>

