ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றக் குழுவின் சம்மதத்துடன், பிரதி சபாநாயகராக தாம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நிராகரித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கும் அவர்கள் வகித்த பதவிகளை இராஜினாமா செய்வதற்கும் தீர்மானித்திருந்தனர்.
எவ்வாறிருப்பினும் பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். எனவே, பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே , ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றக் குழுவின் சம்மதத்துடன், பிரதி சபாநாயகராக தாம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

