சமகால அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து செயற்படுவதாக நேற்று அறிவித்ததையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்த போதிலும் அவர்களுக்கே இன்னும் தனிப் பெரும்பான்மை உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது நாடாளுமன்றத்தில்117 ஆசனங்களைக் கொண்டுள்ளதோடு அவர்களின் பெரும்பான்மை 05 ஆசனங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது விமல் வீரவன்ச மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த 15 பேர் தனித்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 14 பேர் அங்கம் வகிக்கின்றனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒன்பது உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்லங்கா, தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவும் அரசாங்கத்தில் இருந்து விலகி தனித்து செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியே தற்போதைய நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய ஆசனங்களைக் கொண்டுள்ளது. தற்போது அவர்களுக்கு ஆதரவாக 47 ஆசனங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் இன்று இடைக்கால பிரதமர்களாக நியமிக்கப்படலாம் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
விமல் வீரவன்ச மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளாலும் தனித்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் அழகப்பெருமவின் பெயர் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் கட்சிகளிடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

