மன்னிப்பு கேட்பாரா முதல்வர்! – புகழேந்தி தங்கராஜ்

106 0

சென்னையின் ஆகப்பெரிய அழகு அகண்டும் நீண்டும் கிடக்கிற அழகிய கடற்கரை. பட்டும்படாமலும்
தொட்டும்தொடாமலும் அந்தப் பெருமணற் பரப்பைத் தாலாட்டிவருகின்றன வங்கக் கடலலைகள். அதே அலைகள் அந்த நீர்க்கோலத்தை அலங்கோலமாக்கிய கொடுமையை ஒரே ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன். அது 2006 டிசம்பர் 26. வங்கக் கடலலைகள் ஆழிப்பேரலையாக மாறி அந்த அழகிய கடற்கரையைச் சீற்றத்துடன் தாக்கிய நாள்.

பத்தாண்டுகளுக்கு முந்தைய சுனாமி நினைவைத் தட்டி எழுப்புவதைப் போலவே இருந்தன சென்ற வாரம் அதே கடற்கரையில் அரங்கேறிய தொடர் நிகழ்வுகள்.
ஆழிப்பேரலை மாதிரிதான் அந்தக் கடற்கரையில் அணிதிரண்டனர் ஜல்லிக் கட்டுக்காகக் களமிறங்கிய இளைஞர்கள். பல்லாயிரத்தில் ஆரம்பித்து லட்சங்களைத் தொட்டது அவர்களது எண்ணிக்கை. ஆனால் சுனாமிமாதிரி அந்தக் கடற்கரையை அலங்கோலப்படுத்திவிடவில்லை அவர்கள். சொல்லப்போனால் அதன் அழகுக்கு அழகு சேர்த்தனர்.

அப்படியொரு இளைஞர் எழுச்சியை இதற்கு முன் ஒருபோதும் பார்த்ததில்லை சென்னை. அதனால்தான் சென்னையிலேயே இருந்தும் மெரினாவைப் பார்க்காதவர்கள் கூட அந்த இளைஞர்களைத் தரிசிக்க குடும்பம் குடும்பமாகக் கடற்கரை நோக்கிப் படையெடுத்தனர்.(‘அவர்களை நாம் ஒருமுறையாவது தரிசித்தாக வேண்டும்’ என்று நண்பர் வந்தியத்தேவன் சொன்னதைப் பதிவு செய்தே ஆகவேண்டும்.)
அந்த இளைஞர்கள் கூடிய இடம் 40 ஆண்டுகளுக்கு முன் ‘திலகர் கட்டம்’ என்றே அறியப்பட்ட இடம். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் உரையாற்றிய இடம். ‘மிஸ்டர் காந்தி என்னுடைய கூட்டத்துக்குத் தலைமை தாங்க வருகிறீர்களா’ என்று காந்தியிடம் கேட்ட பாரதி காந்தி வர இயலாத நிலையில் ‘நீர் வராவிட்டாலும் நான் பேசுவேன்’ என்று சொல்லிச்சென்று வீர உரையாற்றிய வரலாற்றுத் தலம்.

அந்தத் தலத்தில் களமிறங்கிய இளைஞர்கள் அவர்களைத் தரிசிக்கத் திரண்டவர்கள் ரூ என்று சென்ற ஒரு வாரத்தில் சுமார் ஒருகோடி பேரைச் சந்தித்தது மெரினா. அந்தக்கடற்கரையில் இப்படியொரு ஜனசமுத்திரம் திரண்டது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. அப்படியொரு பெருந்திரளாகத் திரண்ட பின்னும் அந்த இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள்….. தங்களுக்குத் தாங்களே கிழித்துக் கொண்ட கோட்டைத் தாண்டாமல் இருந்தனர். இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகும் அவர்களைப் பார்த்து வியந்துபோனது. அவர்களைப் பார்த்து பயந்துபோனது அநேகமாக மத்திய அரசு மட்டும்தான்!

திலகர் கட்டம் என்கிற அந்த அழகான புனிதத்தலம் இந்த இளைஞர்களால் மேலும் மேலும் பொலிவடைந்துகொண்டே போனது அவர்களது போராட்டம் வலுவடைந்து கொண்டே இருந்தது. அவர்கள் எதைக் கேட்டார்களோ அதை நிறைவேற்றியே ஆகவேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. பொதுவாகவே தூங்கி வழிகிற டெல்லி அதிகாரவட்டம் ஜல்லிக்கட்டுக்கான ஒப்புதலை அவசர அவசரமாக வழங்கியது. விந்திய மலைக்குத் தெற்கே இருக்கிற மக்களின் போராட்டம் ஒன்றுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் தீர்வு எட்டப்பட்டது இந்திய வரலாற்றில் இதுதான் முதல்முறை.

தங்களது உன்னதமான போராட்டத்தின் வெற்றியை அந்த இளைஞர்கள் எப்படிக் கொண்டாடப் போகிறார்கள் என்பதைக் காண ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் காத்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக அவர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கடற்கரையை அலங்கோலமாக்கி தனது வீரதீரப்பராக்கிரமத்தைப் பறைசாற்றியிருக்கிறது தமிழகக் காவல்துறை. கட்டுக்கோப்பான அந்த இளைஞர்களைப் பார்த்துத் தலைநிமிர்ந்த ஒவ்வொரு தமிழனும் கடும்போக்கான இந்தக் காவல்துறையைப் பார்த்துத் தலைகுனிந்து நிற்கிற கொடுமை.

தமிழரின் பாரம்பரியத்தைக் காக்க இளைஞர்கள் போராடுகிற நிலையில் காவல்துறையின் பாரம்பரியத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் ரூ என்று முடிவெடுத்தது அரசாங்கமா காவல்துறையா என்பதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் இதை எழுதுகிறேன்.
உண்மையில் என்ன நடந்திருக்கிறது ரூ என்பதையே பலர் புரிந்துகொள்ளவில்லை. சமூக விரோதிகளுக்கு இடம் கொடுத்து விடாதீர்கள் ரூ என்கிறார் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார். அவரைவிட அவரது நண்பர் தேவலை. ‘யார் ஒருவர் கண்ணியம் தவறியிருந்தாலும் சங்கமித்திருக்கும் அனைவரையும் அது பாதிக்கும்……. அறத்தைக் கைவிடாதீர்…’ என்றெல்லாம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தாலும் ”சட்டப்பேரவை என்ன முடிவு அளிக்கிறது என்பதற்காகக் காத்திருந்த வேளையில் காவல்துறை முன்கூட்டியே நடவடிக்கையில் ஈடுபட்டது ஏன்” என்று கேட்டிருக்கிறார் கமல். காவல்துறை வன்முறையைக் கண்டித்தும் இருக்கிறார்.

இளைஞர் ரூ மாணவர் போராட்டப் புகைப்படங்களைப் பக்கம் பக்கமாக வெளியிட்டு தங்களுக்கும் தங்களது நாளேட்டுக்கும் இருக்கும் தமிழின விரோத இமேஜைத் துடைத்தெறியப்பார்த்த லங்கா ரத்னாக்கள்இ ‘நீலச் சாயம் வெளுத்துப் போச்சு ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு’ கதையாக போராட்டம் முடிந்த மறுநாளே தங்கள் சுயரூபத்தைக் காட்டுகிறார்கள். வெடித்தது வன்முறை முடிந்தது போராட்டம் ரூ என்று அவர்கள் கொடுக்கிற செய்தித் தலைப்பே அவர்கள் யார் என்பதைக் காட்டுகிறது.

செய்தி போதாதென்று ‘அறவழியில் போராடியவர்கள் அதே அழகுடன் முடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்’ என்று தலையங்கம் வேறு தீட்டுகிறார்கள். இந்த வெற்றியைக் கொண்டாடி சகஜ வாழ்க்கைக்கு மாணவர்கள் திரும்ப வேண்டுமாம்…. முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். அமைதியாகவும் கட்டுப்பாட்டோடும் போராடியதற்காகத் தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் அடி உதை மிதி விருதை மறந்துவிட்டு இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்கிறார்களா?

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா ரூ என்று போதிக்கிறார்களா?

நடந்த இனப்படுகொலையை மறந்துவிட்டு சிங்கள ராணுவத்தால் கண்ணெதிரில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளை மறந்துவிட்டு வடகிழக்குத் தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் சகஜவாழ்க்கைக்குத் திரும்பவேண்டும் ரூ என்று தொடர்ந்து போதித்து வருகிற சிங்கள எஜமானர்களின் ஏஜென்டுகளிடமிருந்து இதைத்தவிர வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்?
இவர்கள் அனைவரையும் ஓவர்டேக் செய்துவிட முயல்கிறார் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ். ‘மாணவர் போராட்டம் அமைதியாகத்தான் நடந்தது……… ஆனால் முடிக்கும்போது அப்படி நடக்கவில்லை.. அவசரச்சட்டம் குறித்து மூத்த காவல் அதிகாரிகள் பலமுறை அமைதியாக எடுத்துக் கூறியும் கூட்டத்தில் சிலர் அதை ஏற்காமல் பிரச்சினை செய்தனர்.. போலீசார் ஆயுதமெல்லாம் ஏந்தாமல் பொறுமையாக நிலைமையைக் கையாண்டனர்… கூட்டத்துக்குள் நுழைந்த சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்….’ என்கிறார் ஜார்ஜ்.

ஜார்ஜ் சொல்வதுதான் உண்மையென்றால் அவரிடம் கேட்பதற்கு ஓரிரு கேள்விகள் இருக்கின்றன.
அறவழியில் போராடிய இளைஞர்களிடம் அவசரச் சட்டம் குறித்து அதிகாரிகள் ‘அமைதியாக’ எடுத்துச் சொன்னது 23ம் தேதி காலை ஆறரை மணிக்கு! அப்போதுதான் சட்டத்தின் நகல் அவர்களிடம் தரப்படுகிறது. அதைப் படித்துப் பார்த்து வழக்கறிஞர்களுடன் கலந்துபேசி தங்கள் முடிவை அறிவிக்க 4 மணி நேரம் அவகாசம் கேட்கின்றனர் அந்த இளைஞர்கள். ஆனால் அப்படியொரு நியாயமான அவகாசத்தை வழங்க காவல்துறை மறுத்துவிடுகிறது. ‘உடனே கலைந்து செல்லுங்கள் ‘ என்று வற்புறுத்துகிறது. அடுத்த சில நிமிடங்களில் கூடியிருக்கும் இளைஞர்களையும் பெண்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கிறது. (இதற்கான ஆதாரங்கள் பல நண்பர்களிடம் இருக்கிறது.) குழந்தைகளுடன் உட்கார்ந்திருக்கும் ஓர் இளம் தாயை வெளியேற்றத் தனது பலத்தைப் பிரயோகிக்கிறது. இதுதான் ‘அமைதியாக’ எடுத்துச் சொல்கிற லட்சணமா? அமைதியாகப் போராட்டம் நடக்கிற ஓர் இடத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிற விதத்தில் அதிகாலை நான்கரை மணிக்கே கடற்கரையை முற்றுகையிடுவதைப் போல காவல் படை குவிக்கப்பட்டதே ஏன்? கடற்கரைக்குப் போகிற சாலைகளெல்லாம் அடைக்கப்பட்டதே ஏன்? ஆறரை மணிக்கு ‘அமைதியாக’

‘பொறுமையாக’ எடுத்துச் சொல்லவா? என்ன சொல்ல வருகிறார் ஜார்ஜ்?
முதல் நாளைப் போலவே ஐந்தாவது நாளான ஞாயிற்றுக் கிழமையும் துளிக்கூட வன்முறையில்லாமல் அமைதியாகவே நடக்கிறது இளைஞர்களின் அறவழிப் போராட்டம். முந்தைய நான்கு நாட்களைப் போலவே அன்றும் காவல்துறை அந்த அறச்சீற்றத்தை எந்தத் தடையுமின்றி அனுமதிக்கிறது. ஆறாவது நாள் ரூ திங்கள் கிழமை சட்டப் பேரவைக் கூட்டத்தில். ஜல்லிக்கட்டுக்கான முட்டுக்கட்டையைத் தகர்க்கும் விதத்தில் ரூ மிருகவதைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கும் நிலை.

மசோதா நிறைவேற்றப்பட்டபிறகு தங்களது கோரிக்கை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பெருமிதத்துடன் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தைத் தாங்களாகவே நிறைவு செய்திருக்கக் கூடும். அதுதான் யதார்த்தமான நிலவரம். அதற்கு நேர்மாறாக கலவரமான நிலையை உருவாக்கியவர்கள் யார்? வெண்ணெய் திரண்டு வருகிற நிலையில் தாழியை உடைப்பதைப் போல ஐந்துநாள் அமைதி காத்த காவல்துறை ஆறாவது நாள் அதிகாலையிலேயே போய் ‘இப்போதே வெளியேறுங்கள்’ என்று ஏன் சொல்ல வேண்டும்? ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டாமா?

மாலையில் மசோதா நிறைவேறியவுடன் முதல்வர் பன்னீர்செல்வமே மெரினாவுக்குப் போய் இளைஞர்களிடம் அதை எடுத்துச் சொல்லியிருந்தால் எவ்வளவு நாகரிகமாக இருந்திருக்கும்! அதைக்கேட்டு இளைஞர்கள் கலைந்திருந்தால் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்! அலங்காநல்லூரில் அவரது இதயத்தில் ஏற்பட்ட ரணத்தைக்கூட ஆற்றியிருக்குமே அது! அப்படியொரு வாய்ப்பை அவருக்கு வழங்காமல் ‘காவல்துறை நடவடிக்கை தொடர்பாக நீதி விசாரணை தேவை’ என்று ஆளுநரைச் சந்தித்து முறையிடுகிற வாய்ப்பை ஸ்டாலினுக்கு வழங்கிய பிரகஸ்பதிகள் யார்? பன்னீர்செல்வம் சொந்தச் செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டாரா அல்லது வேறெவராவது அதை வைத்தார்களா… மேதகு வித்யாசாகர் ராவுக்கே வெளிச்சம்!

அதைவிட்டுவிட்டு ‘நான் சோறு போட்டேன்…. இன்னும் நாலைஞ்சுபேர் போட்டாங்க’ என்றெல்லாம் விவரித்து இளைஞர்களின் தன்மானத்தைக் கூறுபோட்டவர்களைக் கூட்டிக் கொண்டுபோய் ‘போராட்டத்தை நிறுத்திக்குங்க’ என்று போதிக்க வைக்க போலீஸ்காரர்கள் யார்? முதல்வர் பன்னீர்செல்வத்தால முடியாதது கூட இவரால் முடியும் ரூ என்று யாராவது ஒரு நடிகரைக் காட்டி காமெடி செய்யப் பார்க்கிறார்களா? இந்தக் கேலிக்கூத்தின் மூல ஊற்று எது?

முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.
டெல்லியிலிருந்து திரும்பிவந்ததும் அவசர அவசரமாக ‘விடிந்தால் ஜல்லிக்கட்டு’ என்று அறிவித்தீர்களே ஏன்? டெல்லி பத்திரிகை நண்பர்கள் கேட்டார்கள் என்பதற்காக அப்படியெல்லாம் அவசரப்பட்டு அறிவித்து அவமானப்படலாமா? நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர். அலங்காநல்லூரில் உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஒட்டுமொத்த தமிழகத்துக்கே ஏற்பட்ட அவமானம். அதை நீங்கள் உணர்கிறீர்களா இல்லையா? ‘நானே போய் வாடிவாசலைத் திறப்பேன்’ ‘நானே போய் மாடு பிடிப்பேன்’ என்றெல்லாம் அறிவித்துக் கொண்டிருப்பதால் என்ன லாபம்?

மசோதா நிறைவேற பத்து மணி நேரமே இருந்த நிலையில் மசோதா நிறைவேறியபின் இளைஞர்ரூமாணவர் போராட்டம் மகிழ்ச்சியோடு நிறைவடைய வாய்ப்பிருந்த நிலையில் அதைக் குலைக்கிற விதத்தில் சென்னையிலும் கோவையிலும் மதுரையிலும் இன்னும் பல பகுதிகளிலும்இ தானே கனிகிற பழத்தைத் தடியால் அடித்துக் கனிய வைக்கிற முயற்சியில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது முதல்வர் என்கிற முறையில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

இந்த விஷயத்தில் நீங்கள் போலி கௌரவமெல்லாம் பார்க்கக் கூடாது. ”காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளை மாட்டையும் சேர்த்ததுதான் ஜல்லிக்கட்டுத் தடைக்கு முதல் காரணம்” என்பதையும் ‘அது தவறுதான்’ என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதைப்போலவே இளைஞர்கள் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கேட்கவும் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நீங்கள் முன்வரவேண்டும்.

அப்படிச் செய்தால் அறவழிப் போராட்டத்தை அரசு அங்கீகரிக்கிறது என்று அர்த்தம். அப்படி அங்கீகரிக்க மறுத்தீர்களென்றால் போராட வருபவர்களிடம் பெட்ரோல் குண்டைத் திணிக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்? என்ன செய்வதாய் உத்தேசம்?