பல்கலைக்கழ மாணவர்களின் படுகொலை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

321 0

கடந்த ஆண்டு குளப்பிட்டிச் சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதவான் சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கானது கடந்த 13ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்காததையடுத்து நீதவான் சதீஸ்கரன் கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையிலேயே மேலதிக விசாரணை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த மாணவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வழக்குத் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதாகக் கூறி கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இன்று காவல்துறையினர் விசாரணை செய்வதை நிறுத்துமாறும் நீதவான் சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இனியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் காவல்துறைமா அதிபருக்கு அல்லது நீதிமன்றத்துக்கு முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.