நெருக்கடியை பயன்படுத்தி அரசியல் பொறியை வைக்கும் கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும்

229 0

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் பயங்கரமான அரசியல் பொறியை வைத்து செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

இந்த அரசியல் பொறியில் கால் வைத்து, தான் உட்பட படையினர் உயிரை பணயம் வைத்து காப்பற்றிய இலங்கையை காட்டிக்கொடுக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என அந்த முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

பிற்றகோட்டேயில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை அடிப்படையாக கொண்டு ஜயந்த சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.

“போர் வீரனை காட்டிக்கொடுப்பவனாக மாற்றும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதன் போது பிளவுப்படாத ஐக்கிய இலங்கையில் சௌபாக்கியத்தை நோக்கி கொண்டு செல்லும் 5 யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ளார்.

இது தமிழ் ஈழம் மற்றும் சிங்கள ஸ்ரீலங்கா ஆகிய இரண்டு இணைந்த ஐக்கிய இலங்கை தொடர்பான யோசனை. பேச்சுவார்த்தையின் போது ஐக்கிய இலங்கை என்ற வார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரிக்கவில்லை.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையிலும் பிளவுப்படாத ஐக்கிய இலங்கை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால், பிளவுப்படாத ஐக்கிய இலங்கை தொடர்பான விடயத்தை முழுமையாக ஏற்று இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜனாதிபதியுடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக தனியான நிதியம் அமைக்கப்பட வேண்டும் என்பது சம்பந்தனின் பிரதான யோசனையாக இருந்தது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த எம்.ஏ.சுமந்திரன், வடக்கு,கிழக்கின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்களின் நிதியை பயன்படுத்த வேண்டுமாயின் 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கம் அவசியம் என கூறியிருந்தார்.

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மதிக்கும் அனைத்து இலங்கையர்களும் இது சம்பந்தமாக கூடிய கவனத்தை செலுத்த வேண்டும்.

போதைப் பொருள் கடத்தல், ஆயுத கடத்தல், மனித கடத்தலை மேற்கொண்டு புலம்பெயர் தமிழர்கள் சேகரித்துள்ள பணத்தை வடக்கு, கிழக்கிற்கு கொண்டு வர தயாராகி வருகின்றனர்.

இதற்காகவே 13வது திருத்திச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்களை கோருகின்றனர். முதலமைச்சர் நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, புலம்பெயர் தமிழர்களின் பணத்தை திறைசேரியின் எவ்வித கண்காணிப்பும் இன்றி, நிதியத்திற்கு வரவழைத்து, பிரிவினைவாத தேவைகளுக்கு பயன்படுத்தும் துஷ்ட நோக்கமே இந்த யோசனை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு யோசனையான காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த உண்மையை கண்டறியும் பொறிமுறையை உருவாக்க இணங்கினால், அதன் மூலம் படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தொழிற்சாலை உருவாகும்.

இதன் மூலம் இராணுவத்தினரை தூக்கு மேடைக்கு அனுப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் நிறைவேறும். அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொடிய புலிப் பயங்கரவாதிகளை விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வரும் முன்னர் விடுதலை செய்வதும் இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40/1 யோசனைக்கு அமைய இலங்கை படையினருக்கு எதிராக போர் குற்றம் சுமத்தப்பட்டது. மனித உரிமை பேரவையின் விசாரணை பொறிமுறையின் பின்னர், 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் இலங்கைக்கு எதிராக 50/1 யோசனை மூலம் இலங்கை படையினருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்படவுள்ளது. இந்த நிலைமைகளை பயன்படுத்தி தமிழ் பிரிவினைவாதிகள் இப்படியான பேச்சுவார்த்தைகளுக்கு உயிரூட்டியுள்ளனர்” எனவும் ஜயந்த சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.