விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையே தொங்கு பாலம்- அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு

259 0

புதிய தொங்கு பாலம் அமைக்கும் இடத்தை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று காலை தனி படகு மூலம் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு ஆண்டுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதாக சுற்றுலா புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் பார்த்துச் செல்வது மட்டுமின்றி, கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடிஉயர திருவள்ளுவர் சிலையை பார்த்துச் செல்கின்றனர்.
இவற்றை பயணிகள் நேரில் பார்வையிடுவதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவையை இயக்கி வருகிறது.
ஆனால், கடலில் அடிக்கடி ஏற்படும் கடல் நீர் மட்டம் ஏற்றத்தாழ்வு மற்றும் கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தடைபடும் சூழ்நிலை இருந்து வருகிறது.
இதற்கு நிரந்தரத் தீர்வாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இந்த 2 மண்டபங்களுக்கு இடைப்பட்ட சுமார் 100 மீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் தற்பொழுது தொங்குப்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறை ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள புதிய தொங்கு பாலம் அமைக்கும் இடத்தை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று காலை தனி படகு மூலம் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி வந்த அமைச்சர் எ.வ.வேலு திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு படகில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் தொங்கு பாலம் அமைப்பது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலம். இங்கு வெளி நாடுகளில் இருந்து ஏராள மான சுற்றுலா பயணி கள் வருகிறார்கள். அவர்கள் கடல் நடுவே உள்ள விவேகா னந்தர் பாறைக்கு படகில் சென்று பார்வையிட்டு திரும்புகிறார்கள்.
அதன் அருகே இன்னொரு பாறையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியின் போது அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை உள்ளது. கடலில் ஏற்படும் மாற்றங்களால் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்தை ரத்து செய்யும் நிலை ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே தொங்கு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஆட்சியில் 140 மீட்டர் நீளத்திலும் 7½ மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் நிதி உதவியுடன் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு இத்திட்டத்தை விரைந்து முடிக்க ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டது.
மேலும் 140 மீட்டர் நீளம் என்பதை 72 மீட்டர் நீளமாக சுருக்கியும், 7½ மீட்டர்அகலத்தை 10 மீட்டர் அகலமாகவும் மாற்றி இத்திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் கோரப்பட்டது.
அதன்படி, ரூ.37 கோடியில் இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் தொங்கு பாலம் அமைக்கும் பணியை முடிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
பாலத்தின் கீழ்பகுதியில் கண்ணாடி தளம் அமைக்கப்படும். இதில் நடந்து செல்லும் பயணிகள் கடலின் அழகையும் ரசிக்க முடியும். இதுபோல இரவு நேரத்திலும் பாலத்தின் அழகையும் ரசிக்க மின்னொளி ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.