கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை பார்த்து ஓவியமாக வரையும் பயிற்சிபெற, சென்னையில் இருந்து 50 மாணவ மாணவிகள் வந்தனர்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை எழில் காட்சிகள், கண்களுக்கு இதமளிப்பவை. அவற்றை ஓவியமாக தீட்டி, அதன் மூலம் பயிற்சி பெற, சென்னையில் இருந்து 50 மாணவ மாணவிகள் கொடைக்கானலுக்கு வந்தனர்.
2 நாட்களாக அவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் கோக்கர்ஸ்வாக் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பசுமை வெளிகளையும், சுற்றுலா தலத்தின் நடைபாதையின் அழகையும், மரங்களின் ஓவியங்களையும் தீட்டி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்தனர்.
வரையப்பட்ட படங்களை சென்னையில் உள்ள ஓவியக்கண்காட்சியில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பசுமை நிறைந்த பகுதிகளை ஓவியங்களாக தீட்டியது தங்களுக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும் அவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ஓவியக்கலை மறைந்துவருவதாகவும், அதனை மீட்டெடுக்கவும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி செய்யப்பட்டதாகவும் கூறினர்.மேலும் கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மத்தியில் ஓவியக்கலையை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ஓவியம் வரைய கற்றுக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்தப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஓவியக் கலையை வளர்க்கும் விதமாக அந்தப்பள்ளியை தத்து எடுத்துள்ளதாகவும் கூறினர். மேலும் ஒவ்வொருவரின் தனித்திறனை வெளிப்படுத்த ஓவியக்கலை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் உற்சாகத்துடன் கூறினர். ஓவியம் வரையும் போது மனது ஒருமுகப்படுத்தப்படுவதால் நேர்மறை சிந்தனைகள் ஏற்படுவதோடு மனதில் உள்ள கவலைகளும் நீங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். காலப்போக்கில் அழிந்துவரும் ஓவியக்கலையை மாணவ மாணவிகள் மத்தியில் உயிர்ப்பிக்க அரசு முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

