யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

243 0

 

வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகதத்தினை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு செயலாளர் கருணாரட்ன ஹெட்டியாராச்சி, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் முப்படையினரும்  கலந்து கொண்டனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து பெயர் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

அத்துடன் குறித்த அலுவலகத்தில் பணிபுரிவதற்காக 4 உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இப்பிராந்திய பணியகத்தின் மூலம் வெளிநாட்டுத் தேவைகளுக்கான பிறப்பு, திருமண, இறப்பு, கல்விச் சான்றிதழ், வெளிநாட்டில் தவிக்கும் இலங்கையர்களுக்கான குடும்பத்தினரின் உதவிகள், புலம் பெயர் பணியாளர்களின் இழப்பீடுகள், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியோருக்கான உதவிகள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.