சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது தற்போதைய நிலைமையில் சிறந்தது – இலங்கை மத்திய வங்கி

182 0

நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது தற்போதைய நிலைமையில் சிறந்ததாக அமையும் என வலியுறுத்தி அரசாங்கத்திடம் விசேட பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணசர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது அவசியமற்றது என ஆரம்பத்தில் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்கிறேன்.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டுள்ள நிலைமையில் வெளிநாட்டு கையிருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக செயற்படுத்த வேண்டிய தீர்மானங்களை 6 மாத பொருளாதார மீட்சி திட்டத்தில் உள்ளடக்கி அதனை கொள்கை அடிப்படையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் வெளியிட்டோம்.

பொருளாதார மீட்சி கொள்கை திட்டத்தினை முழுiமையாக செயற்படுத்தியிருந்தால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்திக்காது.

பலதரப்பட்ட காரணிகளினால் கொள்கை திட்டத்தினை செயற்படுத்த முடியவில்லை.நடந்து முடிந்த விடயத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதால் எவ்வித பயனும் தோற்றம் பெறாது.

தற்போதைய நெருக்கடியான நிலைமையில் மூன்றாம் தரப்பினரது அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளாவிடின் பொருளாதார நெருக்கடி நிலைமை மிகவும் தீவிரமடையும்.

நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்ய நாணய நிதியத்தின் உதவியை நாடுவது சிறந்ததாக அமையும் என அரசாங்கத்திடம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம் என்றார்.