ஜனாதிபதிக்கு 7 வயது அகதி சிறுமி எழுதிய வேண்டுகோள் கடிதம்

267 0

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தற்போது பதவி ஏற்றுள்ளார். இவர் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து அதிரடி உத்தரவுகள் பலவற்றை பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த Bana Alabed( 7) அகதி சிறுமி டிரம்புக்கு உணர்ச்சி பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

View image on Twitter
அதில், தனது பெயர் பானா அலாபெத். சிரியாவின் அலெப்போவை சேர்ந்த 7 வயது சிறுமி. நான் பிறந்ததில் இருந்து சிரியாவில் வாழ்ந்தேன். அங்கு நடைபெறும் போரினால் கடந்த ஆண்டு டிசம்பரில் அலெப்போவில் இருந்து வெளியேறி துருக்கியில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறேன்.

தற்போது துருக்கியில் அமைதியாக வாழ்கிறேன். அலெப்போவில் பள்ளியில் படித்தேன். தற்போது குண்டு வீச்சில் அது அழிந்து விட்டது. எனது பல நண்பர்கள் மரணம் அடைந்து விட்டனர். அவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஏனெனில் அவர்களுடன் நான் விளையாடி மகிழ்ந்து இருக்கிறேன்.

தற்போது என்னால் அலெப்போவில் விளையாட முடியாது. அந்த நகரம் அழிக்கப்பட்டு விட்டது. துருக்கியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் பள்ளிக்கு செல்ல முடியும். இருந்தாலும் நான் சேர வில்லை. சிரியாவில் லட்சக் கணக்கான குழந்தைகள் என்னைப் போன்று மகிழ்ச்சியாக இல்லை. நாட்டின் பல பகுதிகளில் கஷ்டப்படுகின்றனர். நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கிறீர்கள். எனவே நீங்கள் சிரியா மக்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற முடியும்.

சிரியா குழந்தைகளுக்காக ஏதாவது செய்யுங்கள். ஏனெனில் அவர்களும் உங்கள் குழந்தைகளை போன்றவர்கள்தான். உங்களைப் போன்று அவர்களும் அமைதியை விரும்புகின்றனர். சிரியா குழந்தைகளுக்கு ஏதாவது செய்வேன் என எனக்கு நீங்கள் உறுதி அளிப்பீர்களா?

நான் உங்களின் புதிய நண்பராகி இருக்கிறேன். ஆகவே சிரியா குழந்தைகளுக்கு உதவுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது குடும்பத்துடன் அலெப்போவில் இருந்து வெளியேறினார். தற்போது துருக்கியில் அகதியாக தங்கி வருகிறார். இச்சிறுமி தான் சிரியாவில் நிகழும் கோரதாண்டவங்களை அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்து உலக மக்கள் அனைவரையும் தன் பக்கம் விழ வைத்தவர்.

ஜனாதிபதி டிரம்புக்கு எழுதிய கடிதத்தையும் அவர் தனது அம்மா உதவியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.