ஜனாதிபதி அழைத்தவுடன் செல்வதற்கு தமிழர் விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல: சி.அ.ஜோதிலிங்கம்

176 0

ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் இடம் பெறவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக இன்று யாழ் ஊடக மையத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவருடன் சமூக விஞ்ஞான ஆய்வு மைய துணை இயக்குநர் மருத்துவர் க.பவணந்தியும் உடனிருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மார்ச் மாதம் 15ஆம் திகதி மாலை 3 மணிக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்தவித கலந்துரையாடலும் கூட்டமைப்புக்குள்ளோ வெளியிலோ நடாத்தாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

இது தொடர்பாக பங்காளிக்கட்சிகளுடனும் எதுவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. தமிழரசுக் கட்சிக்குள்ளும் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை. கூட்டமைப்புக்கு வெளியே கல்வியாளர்கள், சமூக முக்கியஸ்தர்களுடனும் எந்தவித உரையாடலும் இடம்பெறவில்லை.

பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சிநிரலும் தயாரிக்கப்படவில்லை. பங்காளிகாளிக்கட்சியான ரெலோ பேச்சுவார்த்தையை நிராகரிக்கும் படி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கேட்டிருக்கின்றது.

அதேவேளை கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஜனாதிபதியின் பொறிக்குள் சிக்க வேண்டாம் என சம்பந்தனுக்குக் கடிதம் எழுதியுள்ளது. ஆனாலும் சம்பந்தன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது என்பதில் உறுதியாக உள்ளார்.

ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல. இது வரலாற்று ரீதியாகத் திட்டமிட்ட ஒடுக்குமுறைகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து வரும் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு பற்றிய பிரச்சினை. இதில் சம்பந்தன் மட்டும் தீர்மானங்களை எடுத்துச் செயற்பட முடியாது.

தற்போதைய கோட்டாபய அரசாங்கம் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபட முடியாது. சர்வதேச சமூகம் நாட்டின் ஸ்திரத் தன்மையை உடனடியாகப் பேணுமாறு கேட்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் நாட்டின் ஸ்திரத் தன்மையை ஒருபோதும் பேண முடியாது. கோட்டாபய அரசாங்கம் வலிமையான கொளுக்கிக்குள் மாட்டுப்பட்டுள்ளது. இந்தக் கொளுக்கி தமிழ் மக்களுக்குச் சாதகமானது.

இதனைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இலங்கை அரசுடனான தமிழ்த் தரப்பின் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் ஒருபோதும் வெற்றிகளைத் தரவில்லை.

இலங்கை அரசு தமிழ் மக்களை இது விடயத்தில் ஏமாற்றியதே வரலாறு. எனவே அனைத்து பேச்சுவார்த்தைகளும் சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இடம்பெற வேண்டும். தமிழ் மக்களை அரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை, இன அழிப்புக்கு நீதி கோரும் பிரச்சினை, ஆக்கிரமிப்புப் பிரச்சினை, இயல்புநிலையைக் கொண்டுவருதல் பிரச்சினை, அன்றாடப் பிரச்சினை என ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உரிய வகையில் பேச்சுவார்த்தையில் உள்வாங்கப்படல் வேண்டும். எனவே தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார, கலாச்சார விடயங்கள் தொடர்பாகக் கருத்துக்களை உருவாக்கி மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்ற சமூக, விஞ்ஞான ஆய்வுமையத்தினராகிய நாம் பின்வரும் கோரிக்கைகளைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் முன் வைக்கிறோம்.

1. மார்ச் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் பேச்சு வார்த்தையை நிகழ்ச்சி நிரல் தயாரிப்பதற்கு மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி எதிர்காலத்தில் சர்வதேச மத்தியஸ்தத்தினுடனேயே பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும்.

2. சர்வதேச மத்தியஸ்தர்கள் யார் என்பது தொடர்பாக மார்ச் 15ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஒரு இணக்கத்திற்கு வரலாம்.

3. சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர் பேச்சுவார்த்தை தொடர்பான நல்லெண்ணத்தை அரசு வெளிக்காட்ட வேண்டும். அதன் பின்னரே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்பதை வலியுறுத்த வேண்டும்.

4. அரசியல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி எந்தவித நிபந்தனையுமில்லாமல் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

5. சர்வதேச சமூகம் சிபார்சு செய்தபடி நிலைமாறு கால நீதிக் கோட்பாட்டிற்கிணங்க காணாமல் போனோரின் விவகாரம் உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

6. காணாமல் போனோர்க்கான இழப்பீடு தீர்மானிக்கும் வரை பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக மாதாந்த இழப்பீடு தொகை வழங்கப்படல் வேண்டும். முன்னைய 6000 ரூபா போதுமானதல்ல.

7. இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் உடனடியாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்படல் வேண்டும்.

8. தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

9. தொல்லியல் திணைக்களம் வனபரிபாலன திணைக்களம், வனஜீவரராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, பௌத்த விவகாரங்கள் அமைச்சு என்பன தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

10. தமிழ் பிரதேசங்களில் உள்ள அரச செயலகங்களில் உயர் அதிகாரிகளாகச் சிங்களவர்களை நியமிப்பது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

11. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பவற்றில் எழுபது வீதம் மாணவர்கள் தமிழ் பேசும் மாணவர்களாக இருத்தல் வேண்டும்.

13. தமிழ்ப் பிரதேச கடற்பரப்பில் சிங்கள கடற்தொழிலாளர்களின் ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். குறிப்பாக மயிலிட்டித் துறைமுகத்தில் சிங்கள கடற்தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

14. எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கென துறைமுக சார் நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு உருவாக்கப்படல் வேண்டும்.

இக்குழுவின் ஆலோசனைப்படியே அரசியல் தலைமை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.