உண்ணாவிரதப் போராட்டமானது போராடுபவர்களின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனமும்

254 0

சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமானது போராடுபவர்களின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனத்தையுமே எடுத்துக்காட்டுகிறது என மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா செபமாலை அடிகளார் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,கடந்த காலங்களில் யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பிற்பாடும் எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இராணுவத்திடம் கையிலே கையளிக்கபப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

வீடுகளுக்கு சென்று கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள், வேலைக்கு சென்றவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். கடந்த ஏழரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த தாய்மார்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தார்கள். ஐ.நா வரை மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் இலங்கை அரசானது எந்தவிதமான சாத்வீகமான முன்னெடுப்புக்களையும் செய்யாத அதேவேளை, இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை தெரியப்படுத்தவில்லை.

இன்றைய இந்த உண்ணாவிரதம் தாய்மார்கள், மனைவிமார்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளை தொலைத்த தந்தைமார்கள், தங்களுடைய விரக்தியின் விளிம்பிற்கு சென்று எங்களுக்கு உண்மை வேண்டும்.

ஜனாதிபதியே பதில் சொல்லு, ஐ.நாவே தலையிடு, என்று கோரி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்ததை மேற்கொண்டு வருகிறார்கள்.  ஆகவே அரசாங்கம் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லியே ஆக வேண்டும்.

ஆகவே இங்கு இருப்பவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் கோரியிருக்கின்றார்கள். ஏற்கனவே தங்கள் பிள்ளைகள் மற்றும் கணவன்மாரை தொலைத்துவிட்டார்கள்.

இன்னும் தங்கள் உயிரை அர்ப்பணித்து இந்த உண்ணாவிரதத்தில் இருக்கிறார்கள். ஆகவே தயவுசெய்து நாட்டினுடைய ஜனாதிபதி, நாட்டினுடைய அதிகாரிகள் ஐ.நாசபை மற்றும் மேற்குலக நாடுகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே ஏனைய நாடுகளில் குறிப்பாக ஆஜன்டீனா போன்ற நாடுகளிலே இந்த தாய்மார்களின் அயராத போராட்டத்தினால் அவர்களுக்கு நீதி கிடைத்திருக்கின்றது.

ஆகவே இலங்கைத் தேசத்திலும் கடந்த ஆண்டுகளாக போராடி போராடி களைத்து இறுதியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு இவர்கள் சென்றிருப்பதானது இவர்களது விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனத்தையும் எங்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.

ஆகவே இந்த போராட்டமானது 14 பேருடன் நிற்கப்போவதில்லை இன்னும் ஆயிரக்கணக்கான தாய்மாரும் ஆயிரக்கணக்கான நலன்விரும்பிகளும் மக்களும் இதிலே இணைந்து போராட்டத்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அரசாங்கம் உடனடியாக தீர்வினை பெற்றுத்தர வேண்டும். அதற்கு சாத்தியமான பதில்களை சொல்ல வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அமைக்கப்படவிருக்கின்ற அலுவலகம் கூட எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

உள்ளக பொறிமுறை விசாரணை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆகவே இந்த மாயையான அரசாங்கம் எங்களுக்கு ஒரு சரியான பதிலை கூற வேண்டும்.பொய்களை கூறி ஏமாற்றாமல் இந்த தாய்மாரின் உயிரை காப்பாற்ற அரசாங்கம் உரிய பதிலைத்தரவேண்டும் என தெரிவித்தார்.