மட்டக்களப்பில் மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலைகளில் ஒன்று மடக்கிப்பிடிக்கப்பட்டது(காணொளி)

319 0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் உள்ள வாவியில், மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலைகளில் ஒன்று மீனவர்களால் இன்று மடக்கிப்பிடிக்கப்பட்டது.

மஞ்சந்தொடுவாய் வாவிக்கரையில் நடமாடிய 10 அடி நீளமான முதலை ஒன்றே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களால் பிடிக்கப்பட்ட முதலையை, அப்பிரசேத்திலுள்ள மீன்பிடி வாடியில் கட்டி வைத்துள்ளதுடன், இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு வாவி பகுதியில் முதலைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மீனவர்கள் சிலர் முதலைகளால் கொல்லப்பட்டுள்ளதுடன், சில மீனவர்கள்முதலைகளின் தாக்குதல்களில் அவயவங்களை இழந்துள்ளனர்.

அத்துடன் ஆற்று வாவிக்கு அருகாமையில் மேயும் கால்நடைகளையும் கரைக்கு வரும் முதலைகள் இழுத்துச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

ஏனைய பகுதிகளில் அட்டகாசம் புரியும் முதலைகளை பிடித்து வந்து மட்டு வாவிக்குள் விடுவதே இவ்வாவியில் முதலைகள் அதிகரிப்புக்குக் காரணம் என மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.