மட்டக்களப்பில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கோரி போராட்டம்(காணொளி)

311 0

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கோரும் வகையிலான கையெழுத்துப் போராட்டமொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

நாட்டில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், பெண்களின் அங்கத்துவத்தை அதிகரிக்கக் கோரும் வகையிலான கையெழுத்துப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில், உள்ளுராட்சி, மாகாணசபைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஆதரவுடன் குறித்த கையெழுத்துப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இக்கையெழுத்துப் போராட்டம், நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கையெழுத்துப்பெறும் நிகழ்வு, இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் இணைப்பாளர் செல்வி மு.கிருத்திகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது பெருமளவான பெண்கள் தமது கையொப்பங்களை இட்டு பெண்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்தனர்.

அரசியலில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பதற்கு, 2016ஆம் இலக்க 01 திருத்த சட்டம் ஊடாக அரசியலமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டதுடன், இதன்மூலம் பெண்களுக்கு அரசியலில் 25வீத ஒதுக்கீட்டு முறையினை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.