பெண் ஊடகவியலாளருக்கு இடையூறு விளைவித்து கொள்ளையிட முயற்சி – விசாரணைகள் ஆரம்பம்

267 0

தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது,  பிரபல பெண் ஊடகவியலாளர் நிமந்தி ரணசிங்கவை பின் தொடர்ந்து, அவரது பயணத்துக்கு இடையூறு விளைவித்து  அவரது கைப்பை உள்ளிட்ட உடமைகளை கொள்ளையிட முயன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்  வெல்லம்பிட்டி பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் நேற்று (10) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவுக்கு விஷேட அறிக்கையை சமர்ப்பித்து அது தொடர்பில் அறிவித்தனர்.

கடந்த 5 ஆம் திகதி பிரபல சிங்கள ஊடகமான லங்கா தீப பத்திரிகையின் அலுவலக ஊடகவியலாளர் நிமந்தி ரணசிங்க , வெல்லம்பிட்டி பொலிஸ்  நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

அதன்படி இடையூறு விளைவித்தமை, கொள்ளைக்கு முயன்றமை ஆகிய குற்றங்கள் தொடர்பில்  தண்டனை சட்டக் கோவையின் 381,332 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றம்  ஒன்று இடம்பெற்றுள்ளதாக கருதி இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

கடந்த 3 ஆம் திகதி, ஊடகவியலாளர் நிமந்தி ரணசிங்க தனது மோட்டார் சைக்கிளில், அலுவலகம் நோக்கி செல்லும் போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ள இருவர்,  அவரை வழி மறித்து கொள்ளைக்கு முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் வெல்லம்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தற்போது இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.