ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பதவியோ அதிகாரமோ முக்கியமல்ல. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எமது இலக்காகும்.
அற்காக எம்மை குறைத்து மதிப்பிட்டாலோ அல்லது அச்சுறுத்த எண்ணினாலோ பதவிகளை துறந்து மக்களுக்காக செயற்படுவதற்கு நாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு நேற்று வியாழக்கிழமை கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டும் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் தற்போது எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தான் பொறுப்புள்ள ஒரு கட்சியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திடம் 15 யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
அதனையடுத்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பிற்கு ஒரு குழுவொன்று வருவதாகவும், எம்மை எச்சரிப்பதற்காகவே சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
எனினும் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னர் சு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் இணைந்து கலந்தாலோசித்து அதன் பின்னரே பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.
எமக்கு பதவிகளும் அதிகாரங்களும் முக்கியமல்ல. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதே முக்கியமாகும்.
எனவே எம்மை குறைத்து மதிப்பிட்டாலோ அல்லது அச்சுறுத்த நினைத்தாலோ அனைவரும் பதவிகளை துறந்து மக்களுக்காக செயற்படவே தீர்மானித்திருந்தோம்.
எனினும் கலந்துரையாடலுக்கு அழைத்து ஜனாதிபதி எமது நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்தார்.
மக்கள் முன்னரைப் போன்று மகிழ்வுடன் வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கான யோசனை எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏனைய கட்சிகள் அரசாங்கத்தின் குறைபாடுகளையே கூறுகின்றனர். ஆனால் சுதந்திர கட்சி மாத்திலமே தீர்வினை முன்வைத்துள்ளது.
அரசாங்கத்திடமுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு நாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றார்.

