உள்ளாட்சி தலைவர்கள் மூலம் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்படும்- மா.சுப்பிரமணியன் தகவல்

382 0

தமிழகத்தில் இதுவரை 23 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றைய முகாமில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 977 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாலை 4 மணிக்கு இருங்காட்டு கோட்டையில் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கிருந்து சிதம்பரம், சீர்காழி, திருவெண்காடு ஆகிய பகுதிகளுக்கு சென்று அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்தார்.

அப்போது ஆஸ்பத்திரிகளில் இருக்கும் வசதிகள், தேவைப்படும் வசதிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது அவர் கூறியதாவது:-

அனைத்து பகுதிகளிலும் அனைத்து மருத்துவ வசதிகளும் மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் ஆஸ்பத்திரிகளை ஆய்வு செய்து தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை 23 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றைய முகாமில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 977 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 99,597 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 5,54,088 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார்கள்.

18 வயதுக்கு மேற்பட்டோரில் 91.70 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் 73.46 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார்கள்.

இதுவரை 6 லட்சத்து 65 ஆயிரத்து 845 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பொறுப்பேற்றுள்ளதால் இனி அவர்கள் மூலமும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும்.

தமிழகத்தில் இருந்து உக்ரேனுக்கு மருத்துவ படிப்பு படிக்க சென்றவர்கள் எப்படியாவது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தீவிர ஆசையில் சென்றவர்கள் கடுமையான குளிர் பிரதேசத்தில் சிரமப்பட்டு படித்தவர்கள். மீட்கப்பட்டு வரும் மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக் குறியாகி உள்ளது. இறுதியில் அவர்களால் அங்கு செல்ல முடியாது. அகில இந்திய மருத்துவ கல்வி கவுன்சில் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் படிப்பை தொடர்வதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.