போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து மெரினா கடற்கரை அருகே விடிய விடிய தூங்காமல் மக்கள் தவிப்பு

336 0

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம், சர்மாநகர், ரோட்டரி நகர் உள்ளிட்ட இடங்களில் பெண்கள், குழந்தைகளுடன் 2வது நாளாக விடிய விடிய தூங்காமல் வீடுகளுக்கு வெளியே அமர்ந்து இருந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடுவதாக கூறி லைட்ஹவுஸ் பகுதிகளில் இரவு நேரத்திலும் வீடு வீடாக புகுந்து போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. போலீசுக்கு பயந்து நடுக்குப்பம், சிவராஜ்புரம், மாட்டங்குப்பத்தில் வசிக்கும் ஆண்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில் வீடுகளுக்கு வரும் போலீசார் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். போலீசார் தொடர்ந்து அங்கு கைது நடவடிக்கை தொடரவுள்ளதாக எச்சரித்துள்ளதால் அச்சத்துடன் இருப்பதாக பெண்கள், குழந்தைகள் வேதனையில் உள்ளனர். இறக்கமின்றி அப்பாவிகளை போலீஸ் அடித்து இழுத்து சென்றது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 7 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. திருவல்லிகேணி, லைட்ஹவுஸ் காவல்நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது, வாகனங்களும் தீக்கு இரையாகின. வன்முறையில் ஈடுபட்டவர்கள் என 100க்கும் மேற்பட்டோர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.