ஜெனீவா அரங்கில் அரசாங்கத்தின் பதிலை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறோம் – ஹிருணிகா

245 0

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதை எதிர்க்கட்சி என்ற ரீதியில் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஜெனீவா அரங்கில் அரசாங்கம் பொய்களையே கூறும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். எனவே தான் சஜித் பிரேமதாச ஆட்சியில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று சர்வதேசமும் நம்புவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போதைய நிலைமையை அவதானிக்கும் போது எதிர்காலத்தை எண்ணும் போது அச்சம் ஏற்படுகிறது. புத்தாண்டின் போது நிச்சயம் உணவு பற்றாக்குறை ஏற்படும்.

அத்தியாவசி சேவைகளில் ஒன்றான மின்சாரம் நாளாந்தம் துண்டிக்கப்படுவதால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

மின்சாரத்தை தடையின்றி பெற்றுக் கொள்வது மக்களின் அடிப்படை உரிமையாகும். அரசாங்கம் அதனையும் வழங்க மறுக்கிறது. தமது உரிமைகளைக் கோரி மக்கள் வீதிக்கு இறங்கி போராடினால் அரசாங்கம் என்ன செய்யும்?

தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இல்லத்தை மக்கள் முற்றுகையிட வேண்டும். காரணம் மின் கட்டணத்தை செலுத்தியே மக்கள் அதனைப் பெறுகின்றனர்.

எனவே அரசாங்கம் அதன் போக்கிற்கு மின்சாரத்தை துண்டிக்க முடியாது. இவ்வாறான நிலையில்  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கோடியே 20 இலட்சம் மின் கட்டணத்தை செலுத்தாமலிருந்து வந்துள்ளார். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

ராஜபக்ஷாக்கள் ஒரு புற்று நோயைப் போன்று நாட்டையே அழிக்கக் கூடியவர்கள். எனவே இவர்களை விரட்டியடிப்பதற்கு மக்கள் தைரியத்துடன் முன்வர வேண்டும். ராஜபக்ஷாக்களால் நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும் என்று கூறிய பௌத்த மதகுருமார்களிடம் சென்று ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.

ராஜபக்ஷாக்கள் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பார்களாயின் சர்வதேசத்திடமிருந்து எவ்வித உதவிகளும் கிடைக்கப்பெறமாட்டாது. ஆனால் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற போதிலும் , சர்வதேசம் அவரை ஏற்றுக் கொண்டுள்ளது.

அதன் காரணமாகவே எதிர்க்கட்சியின் மூச்சு வேலைத்திட்டத்திற்கு சீனா பெருமளவு நிதியுதவியை வழங்கியது. அதே போன்று இந்தியா அரசாங்கத்திற்கு வழங்கும் உதவிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவருடன் கலந்தாலோசிக்கிறது.

இவ்வாறு சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து பயணிக்கின்றன. இந்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்திடம் பல கேள்விகளை முன்வைத்துள்ளது.

அதற்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் ஜெனீவா அரங்கில் இலங்கை பொய்களையே கூறும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

எனவே தான் சஜித் பிரேமதாச ஆட்சியில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று சர்வதேசம் நம்புகிறது. எனவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் போது நாட்டின் தலைவராக சஜித் பிரேமதாசவை தெரிவு செய்ய வேண்டும்.

இராணுவ சிப்பாய்களைக் கொண்டு கொழும்பை அழகாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழகிய பூந்தோட்டங்களை நிர்வகிக்க முடியும். ஆனால் நாட்டை அவ்வாறு நிர்வகிக்க முடியாது என்றார்.