எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை சந்திக்க தயார் – உதய

200 0

எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால கடன் வசதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை அரசாங்கம் சந்திக்கவுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, அமைச்சர் உதய கம்மன்பில, இன்று நாடாளுமன்றில் வைத்துத் தெரிவித்தார்.

ரஷ்ய – உக்ரைன் பதட்டத்தின் மத்தியில், எண்ணெய் விலை 115 டொலர்கள் வரையில் அதிகரிக்க இருப்பதாகவும், தற்போது டொலர் தட்டுப்பாட்டில் உள்ள இலங்கை இந்த சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் வழங்கிய வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, தற்போதைய சூழ்நிலையில் எரிபொருளை நாட்டுக்குக் கொண்டுவருவது சவாலானது என்பதை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.

மார்ச் மாதம் நடுப்பகுதி அளவில் எண்ணெய் விலை 100 டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், தற்போதே அந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மார்ச் மாதம் நடுப்பகுதியாகும் போது எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 115 டொலர்கள் வரையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இதுவரையில் இலங்கைக்குப் பிரவேசித்த எண்ணெய்க் கப்பல்கள் எவையும் திருப்பியனுப்பப்படவில்லை.

வலுசக்தி அமைச்சர் என்ற வகையில் எண்ணெய் கப்பல்களை நாட்டுக்கு வரவழைக்க மட்டுமே முடியும்.

அவற்றிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான டொலரை அரசாங்கமே வழங்க வேண்டும்.

அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம், எரிபொருள் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து, நீண்டகால கடன் வசதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகக் கலந்துரையாடவிருப்பதாக, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதேவேளை, டொலர் பற்றாக்குறை காரணமாக விடுவிக்க முடியாமல் இருந்த டீசல் அடங்கிய சிங்கப்பூர் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

35.3 மில்லியன் டொலர் குறித்த கப்பல் நிறுவனத்திற்குச் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர்.ஒல்கா தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த கப்பலிலிருந்து 37 ஆயிரத்து 500 மெற்றிக் டன் டீசல் இன்று பிற்பகல் இறக்கப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் இரண்டு நாட்களில் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.