ஜல்லிக்கட்டு களம் – மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு

228 0

201701220616490194_Marina-jallikattu-demonstrated-prolongation-of-the-surge_SECVPFதமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி சென்னை மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது.

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக நடைபெறவில்லை.

இந்த ஆண்டு பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால், மத்திய அரசு கைவிரித்து விட்டது.

இதையடுத்து அரசை நம்பி எந்த வித பிரயோஜனமும் இல்லை, நாமே களத்தில் இறங்கலாம் என்று இளைஞர்களும், மாணவர்களும் முடிவு செய்தனர். சமூக வலைத்தளம் மூலம் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.

அதையடுத்து சென்னை மெரினாவில் கடந்த 17ஆம் திகதி  இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது.

பெண்களும், மாணவிகளும் முழு அர்ப்பணிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர்களுக்கு இணையாக ஆவேசமாக கோஷங்களை எழுப்புகிறார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பு மீது கோப கணைகளை வீசுகிறார்கள்.

மாணவர்களின் போராட்டத்தின் எழுச்சியை கண்டு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே முழு ஆதரவை அளித்துள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் உற்சாகத்துடன், சோர்வடையாமல் இருப்பதற்கு தேவையான உணவுபொருட்களை சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த உதவிக்கரம் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே இருக்கிறது. மாணவர்கள் இரவு, பகல் கண்விழித்து போராடினாலும், சோர்வடையாமல் கூடுதல் உற்சாகத்துடன் போராட்டத்தை கொண்டு செல்கிறார்கள்.

தமிழகத்தில் முழுஅடைப்பு நடந்த நேற்று முன்தினம் மெரினா கடற்கரை திக்குமுக்காடும் வகையில் 10 லட்சம் பேர் திரண்டு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் நேற்றும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள், மின்சார ரெயில்கள் மூலம் படையெடுத்து வந்தார்கள்.

மதியத்திற்கு பிறகு கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது.

கடற்கரை சர்வீஸ் சாலை மற்றும் காமராஜர் சாலைகளில் அலை கடலென மக்கள் வெள்ளம் குவிந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம், குடும்பமாக வந்து ஆதரவு தந்தனர்.

அலை அலையாய் திரண்டு வரும் மக்கள் கூட்டத்தால் மெரினா கடற்கரைக்கு செல்லும் எல்லா சாலைகளும் முடங்கின. சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்க பறக்கும் ரெயில்கள் நிரம்பி வழிந்தன.

இரவு 10 மணி நிலவரப்படி, நேற்றைய போராட்டத்திற்கு சுமார் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை பொதுமக்கள் திரண்டு வந்து எழுச்சிமிகு ஆதரவு அளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடித்து வருகிறது.

39F0F203-1521-4A9C-AD07-0208CB02158D_L_styvpf 201701220616490194_Marina-jallikattu-demonstrated-prolongation-of-the-surge_SECVPF BA6BA90A-A5D9-4236-AFE7-A406D519BFF7_L_styvpf EC8A94B1-2966-4479-88C2-010A80DE4A46_L_styvpf