மதுரையில் நாளை கமல்ஹாசன் பிரசாரம்

307 0

மதுரையில் நடிகர் கமல்ஹாசன் பிரசாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதில் நடிகர் கமல்ஹாசனின் “மக்கள் நீதி மய்யம்” தனித்து போட்டியிடுகிறது. மதுரை மாநகராட்சியில் 98 வார்டுகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மதுரை மாவட்டத்தின் 3 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் மக்கள் நீதி மய்யம் பெருவாரியான வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நாளை (15-ந் தேதி) மதுரை வருகிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11 மணிக்கு வரும் கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் நிர்வாகிகள் தலைமையில் கட்சி தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு கொடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவர் மதுரை தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதிய உணவுக்கு பிறகு சிறிது நேரம் அங்கேயே ஓய்வு எடுக்கிறார். பின்பு மாலை 4 மணிக்கு பிறகு பிரசாரத்தை தொடங்குகிறார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வேனில் சென்று பிரசாரம் செய்கிறார்.

மாலை 4.30 மணிக்கு பெரியார் பஸ் நிலையம் அருகில் பிரசாரத்தை தொடங்கும் அவர் தொடர்ந்து 5 மணிக்கு ஆரப்பாளையத்திலும், 5.30 மணிக்கு செல்லூரிலும், 6 மணிக்கு ஆனையூரிலும், 7 மணிக்கு தபால் தந்தி நகரிலும் பிரசாரம் செய்கிறார்.

இரவு 7.30 மணிக்கு அய்யர் பங்களா பகுதியிலும், 8 மணிக்கு வண்டியூரிலும், 8.15 மணிக்கு ஓபுளா படித்துறை பகுதியிலும், 8.40 மணிக்கு ஜெய்ஹிந்துபுரத்திலும், 9 மணிக்கு திருப்பரங்குன்றத்திலும் பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்கிறார்.

மதுரையில் நடிகர் கமல்ஹாசன் பிரசாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (15-ந் தேதி) மதுரையிலும், 16-ந் தேதி கோவையிலும் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

ஊழலற்ற, வெளிப்படையான மக்கள் பங்கேற்புடன் கூடிய உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தும் மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டம், வாக்குறுதிகளை விளக்கியும், வேட்பாளர்களை ஆதரித்தும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.