காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரைப்பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் இன்று காலையிலிருந்தே வந்து குவிய தொடங்கினர்.
காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும் தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர். கடற்கரை பகுதியில் உள்ள மறைவான இடங்களில் அமர்ந்திருந்து காதல் ஜோடியினர் தங்களது காதல் லீலைகளை அரங்கேற்றினர். கடற்கரையில் நின்றவாறு காதல் ஜோடிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை கவர் செய்து தாங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கன்னியாகுமரி கடற்கரை பகுதி, காந்தி மண்ட பம் பஜார், கடற்கரை சாலை, சன்னதி தெரு, விவேகானந்தராக் ரோடு, ஆகிய பகுதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கிச் சென்றனர். இதேபோல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களாக வழங்கி மகிழ்ந்தனர். கடற்கரையிலுள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களிலும் காதலர்கள் பலர் ஜோடியாக அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இன்று ஏராளமான காதல் ஜோடிகள் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலையில் ரேஸ் செய்தபடி வலம் வந்தனர். இதில் மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறியசில காதல் ஜோடிகளை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஒரு சில காதல் ஜோடிகள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்தனர். காதல் ஜோடியினர் ரோஜா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கன்னியாகுமரியில் உள்ள பேன்சி கடைகளில் கடல் சிப்பி, கடல் சங்கு கீ செயின் மற்றும் பரிசுப் பொருட்களை ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்ந்தனர். இதனால் பரிசு பொருட்கள் கடைகளில் கூட்டம் அலைமோதியது. காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் போலீசார் வலம் வந்தபடி இருந்தனர்.

