ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.
வேட்பாளர்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தெரு தெருவாகவும், வீடு வீடாகவும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
தமிழக எதிர்கட்சி தலைவரும், அதி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டம், மாவட்டமாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, காரமடை, மதுக்கரை, கூடலூர் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.
அங்கு அவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்கின்றனர்.
வரவேற்பை ஏற்று கொண்டதும், எடப்பாடி பழனிசாமி காரில் ஏறி பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா அரங்கத்திற்கு செல்கிறார். மதியம் 2.30 மணியளவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தொடங்குகிறது.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள், அ.தி. மு.க. முக்கிய நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்காக கொடிசியா அரங்கத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள், வேட்பாளர்கள் தொண்டர்கள் அமரும் வகையில் அரங்கம் முழுவதும் அரசின் வழிகாட்டு நெறிமுறையை கடைபிடித்து சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கோவை பிரசாரத்தை முடித்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி திருப்பூர் செல்கிறார்.
திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரத்தில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் 59 வேட்பாளர்கள், 4 நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள், 42 பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

